பட்ஜெட் புத்தகத்தில் கெம்பேகவுடா புகைப்படத்திற்கு அவமானம்


பட்ஜெட் புத்தகத்தில் கெம்பேகவுடா புகைப்படத்திற்கு அவமானம்
x
தினத்தந்தி 6 March 2018 3:45 AM IST (Updated: 6 March 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

பட்ஜெட் புத்தகத்தில் கெம்பேகவுடா புகைப்படத்திற்கு அவமானம் மேயர் சம்பத்ராஜ் மன்னிப்பு கோரினார்.

பெங்களூரு,

பட்ஜெட் புத்தகத்தில் கெம்பேகவுடா புகைப்படத்திற்கு ஏற்பட்ட அவமானத்துக்கு பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சம்பத்ராஜ் மன்னிப்பு கோரினார்.

பெங்களூரு மாநகராட்சியில் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட் புத்தகத்தில் கெம்பேகவுடாவின் புகைப்படம் தெளிவாக இல்லாமல் அச்சிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் கெம்பேகவுடாவை மேயர் உள்ளிட்ட ஆளுங்கட்சியினர் அவமதித்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே மாநகராட்சி கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநகராட்சி கூட்டத்தில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி பேசுகையில், பட்ஜெட் புத்தகத்தில் கெம்பேகவுடாவின் புகைப்படத்திற்கு அவமானம் இழைக்கப்பட்டு உள்ளது. இது கண்டிக்கத்தக்கது என்றார். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது இதை கண்டித்து பத்மநாபரெட்டி சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இந்த நிலையில் மாநகராட்சி கூட்டத்தில் நேற்று மேயர் சம்பத்ராஜ் பேசுகையில், “பட்ஜெட் புத்தகத்தில் கெம்பேகவுடாவின் புகைப்படம் அச்சிடப்பட்டதில் சிறிய அளவில் தவறு நடந்துவிட்டது. இதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். அந்த தவறை சரிசெய்யும் நோக்கத்தில் புதிய புத்தங்களை அச்சிட்டு வினியோகம் செய்வோம்“ என்றார்.

அப்போது ஆளும் காங்கிரஸ் குழு தலைவர் சிவராஜ் எழுந்து பேசுகையில், “கெம்பேகவுடா மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. கெங்கல் அனுமந்தய்யாவின் ஆட்சி காலத்தில் இருந்து யாரும் கெம்பேகவுடா ஆய்வு மையம் அமைக்கவில்லை. எங்கள் ஆட்சியில் கெம்பேகவுடா ஆய்வு மையத்தை அமைத்து ரூ.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம்“ என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய முன்னாள் மேயர் மஞ்சுநாத்ரெட்டி, “எங்கள் தவறுக்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். ஆனால் காங்கிரஸ் அரசு மீது பா.ஜனதா வெளியிட்ட குற்றச்சாட்டு புத்தகத்தில் வெளிமாநிலங்களில் உள்ள மோசமான சாலைகளை அச்சிட்டு உள்ளர்கள். இதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்“ என்றார். அப்போது காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கவுன்சிலர்கள் எழுந்து நின்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story