பொதுவினியோக முறையை பாதுகாத்திட வலியுறுத்தி போராட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முடிவு


பொதுவினியோக முறையை பாதுகாத்திட வலியுறுத்தி போராட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முடிவு
x
தினத்தந்தி 6 March 2018 3:45 AM IST (Updated: 6 March 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

பொது வினியோக முறையை பாதுகாத்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய பாரதீய ஜனதா அரசு இந்தியா முழுவதும் விவசாயிகளிடமிருந்து நெல், கோதுமை ஆகியவற்றை கொள்முதல் செய்வதை நிறுத்தி இந்திய உணவு கழகத்தின் செயல்பாடுகளை முடக்கியுள்ளது. இது பெரும் வர்த்தகர்களை உணவு உற்பத்தி, உணவு வழங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட வழிவகை செய்யும். புதிய உணவு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் மாதம் ரூ.833 வருமானமுள்ள குடும்பங்களுக்கு ரேஷனில் பொருட்கள் இல்லை என்று முடிவெடுத்துள்ளது.

இத்தகைய திட்டங்களை செயல்படுத்தி பரிசோதிக்கும் களமாக புதுச்சேரி மாநிலத்தை மத்திய அரசு மாற்றியிருக்கிறது. புதுச்சேரிக்கு வழங்கவேண்டிய மண்எண்ணெய், சர்க்கரை போன்றவை நிறுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அரிசிக்கு பதிலாக வங்கியில் பணம்போட ஆரம்பித்தார்கள். மாநில அரசு வழங்கும் 20 கிலோ அரிசியும், சில பொருட்களும் மட்டுமே ரேஷன்கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. சர்க்கரை உள்ளிட்ட பண்டிகை கால இலவசங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. மத்திய ஆட்சியாளர்கள் புதுச்சேரியை வஞ்சித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

புதுவை காங்கிரஸ் ஆட்சியாளர்களோ, தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு மத்திய பாரதீய ஜனதாவின் திட்டங்களை புதுச்சேரியில் அமல்படுத்துகிறார்கள். அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

அத்தியாவசிய பொருட்களை ரேஷன்கடைகள் மூலம் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் வழங்கவேண்டும், மூடிய ரேஷன்கடைகள் அனைத்தும் திறக்கப்பட வேண்டும், பொதுவினியோக திட்டத்தை பலப்படுத்துவதன் மூலமே ஏழை, எளிய மக்கள் உரிய பலன்களை பெறுவார்கள்.

இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுவினியோக முறையை பாதுகாத்திடவும், உணவு உரிமையை பாதுகாத்திடவும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் வருகிற 10-ந்தேதி முதல் ஒரு வார காலத்திற்கு ரேஷன் கடைகளை திறந்திடுக என்ற கோரிக்கை முழக்க போராட்டத்தை நடத்த உள்ளோம். அடுத்தகட்டமாக சட்டசபை முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு ராஜாங்கம் கூறினார்.

Next Story