ஆளும் காங்கிரஸ் அரசு சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும், அ.தி.மு.க. வலியுறுத்தல்


ஆளும் காங்கிரஸ் அரசு சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும், அ.தி.மு.க. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 March 2018 4:00 AM IST (Updated: 6 March 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசு சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியானது தேர்தலுக்கு முன்பு தனது தேர்தல் வாக்குறுதிகளில் சொன்ன அறிவிப்புகளையும், பதவியேற்று முதல் கையெழுத்திட்ட 3 அறிவிப்புகளையும் கூட செயல்படுத்த முடியாத அரசாக உள்ளது.

அரசின் செயல்படாத தன்மையினால் புதுச்சேரி மாநில மக்கள் பல்வேறு துயரங்களை நாள்தோறும் அனுபவித்து வருகின்றனர். மின்சார கட்டணம், வீட்டு வரி, சொத்துவரி போன்று மக்கள் பாதிக்கப்படும் அனைத்து வரிகளையும் தான்தோன்றித்தனமாக உயர்த்தி புதுவை மாநில வரலாற்றில் பொதுமக்களே தாமாக முன்வந்து முழுஅடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த காங்கிரஸ் அரசின் கடுமையான நிதிப்பற்றாக்குறைக்கு இடையே கவர்னரின் எதிர்ப்பினையும் மீறி வாரிய தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர்களுக்கும், வாரிய தலைவர்களுக்கும் ஏற்பட்ட போட்டியினால் தற்போது 4 வாரிய தலைவர்கள் முதல்-அமைச்சரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே ஆளும் காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்கும் தி.மு.க. சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ. ஆளும் காங்கிரஸ் அரசு தங்களுக்கு மரியாதை கொடுக்கவிலை என்றும் எங்கள் தயவில் ஆட்சி நடக்கிறது என்பதை மறந்து எங்களிடம் எந்த விவகாரங்களையும் கலந்து ஆலோசிப்பதில்லை எனவும், இந்த நிலை நீடித்தால் ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன் மூலம் புதுவை அரசு ஸ்திரத்தன்மையின்றி காணப்படுவது வெட்டவெளிச்சமாகி உள்ளது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மிரட்டல், கூட்டணி கட்சியினரின் ஆதரவு வாபஸ் எச்சரிக்கை இதுபோன்ற சிக்கல்கள் நிலவுவதால் புதுச்சேரி அரசு உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஓம்சக்தி சேகர் கூறியுள்ளார்.

Next Story