செங்கோட்டை அருகே மனைவிக்கு அரிவாள் வெட்டு; கணவர் தலைமறைவு போலீசார் தீவிர விசாரணை


செங்கோட்டை அருகே மனைவிக்கு அரிவாள் வெட்டு; கணவர் தலைமறைவு போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 7 March 2018 2:00 AM IST (Updated: 6 March 2018 5:56 PM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே குடும்ப பிரச்சினையில், கணவர் அரிவாளால் வெட்டியதில் மனைவி படுகாயம் அடைந்தார்.

செங்கோட்டை,

செங்கோட்டை அருகே குடும்ப பிரச்சினையில், கணவர் அரிவாளால் வெட்டியதில் மனைவி படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவான கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.

மது பழக்கத்தால் பிரச்சினை

செங்கோட்டை அருகில் உள்ள விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது32). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி காளியம்மாள்(30). ராஜகோபாலுக்கு மது பழக்கம் உண்டு. இவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு வந்த ராஜகோபாலுக்கும் மனைவிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் தகராறு முற்றியதில் வீட்டில் இருந்த அரிவாளால் மனைவையை ராஜகோபால் சரமாரியாக வெட்டினார். இதில் அலறியவாறு ரத்த வெள்ளத்தில் காளியம்மாள் கீழே விழுந்தார்.

ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

இதை தொடர்ந்து ராஜகோபால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காளியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவருடைய வீட்டுக்கு திரண்டு சென்றனர். அங்கு உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செங்கோட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ராஜகோபாலை தேடிவருகிறார்.

Next Story