நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 34 ஆயிரம் பறவைகள் உள்ளன கணக்கெடுப்பில் தகவல்


நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 34 ஆயிரம் பறவைகள் உள்ளன கணக்கெடுப்பில் தகவல்
x
தினத்தந்தி 7 March 2018 2:30 AM IST (Updated: 6 March 2018 8:51 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 34 ஆயிரத்து 189 பறவைகள் உள்ளன.

நெல்லை,

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 34 ஆயிரத்து 189 பறவைகள் உள்ளன என்று அகத்தியமலை மக்கள் சார் இயற்கைவள காப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கூறினார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

34 ஆயிரம் பறவைகள்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள குளங்களில் வாழ்கின்ற நீர்வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த ஜனவரி மாதம் நடந்தது. இதில் 80 பேர், 6 குழுக்களாக பிரிந்து சென்று மொத்தம் 46 குளங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் மானூர், கங்கைகொண்டான், வடகரை குளங்களில் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் இருந்தது. மாறாந்தை பகுதியில் உள்ள குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு இருந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்ற இந்த கணக்கெடுப்பில் மொத்தம் 34 ஆயிரத்து 189 நீர்வாழ் பறவைகள் இருப்பது தெரியவந்தது. இதில் 69 வகையான பறவைகள் உள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் பேய்குளத்தில் 3 ஆயிரத்து 154 பறவைகளும், வெள்ளூர்குளத்தில் 2 ஆயிரத்து 311 பறவைகளும், கஸ்பா குளத்தில் 2 ஆயிரத்து 311 பறவைகளும், நெல்லை மாவட்டம் துப்பாக்குடி குளத்தில் 2 ஆயிரத்து 898 பறவைகளும் அதிகமாக காணப்பட்டன. மற்ற குளங்களில் குறைவான அளவிலேயே பறவைகள் இருந்தன.

ஊசிவால் வாத்து

இந்த கணக்கெடுப்பில் உண்ணிக்கொக்கு, சில்லித்தாரா, சிறிய நீர்காகம், கருப்பு கோட்டான், வெளிநாட்டில் இருந்து வந்த வலசை வாத்தினங்கள், ஊசிவால் வாத்து, நீலசிறகு வாத்து, களியன், வரித்லை வாத்து உள்ளிட்ட பறவைகள் இனங்கள் வந்து இருந்தன. பறவைகள் சரணாலயத்தை பாதுகாக்க வேண்டும். நெல்லை மாவட்டத்திற்கு தான் அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு தேவையான தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடவேண்டும்.

இந்த ஆண்டு பறவைகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. சில குளங்களில் மீன் பாசி குத்தகைக்கு எடுத்தவர்கள் குளங்களில் வெடி போட்டு மீன் பிடிப்பதால் பறவைகள் குளத்தை விட்டு வெளியே செல்கின்ற நிலை உள்ளன. பறவைகளை பாதுகாக்க வனத்துறையும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story