கடை வாடகை உயர்வு பிரச்சினை: ஐகோர்ட்டு உத்தரவுக்கு முரணாக செயல்படும் விருதுநகர் நகராட்சி, மறுநிர்ணயம் செய்ய கோரிக்கை


கடை வாடகை உயர்வு பிரச்சினை: ஐகோர்ட்டு உத்தரவுக்கு முரணாக செயல்படும் விருதுநகர் நகராட்சி, மறுநிர்ணயம் செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 7 March 2018 3:45 AM IST (Updated: 7 March 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் நகராட்சி கடைகளின் வாடகை உயர்வு பிரச்சினையில் மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டபடி நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி கடைகளுக்கு 3 வருடங்களுக்கு ஒரு முறை 15 சதவீத வாடகை உயர்த்தி வசூலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதற்கிடையில் தமிழக அரசு நகராட்சி கடைகளுக்கு 9 ஆண்டுகள் குத்தகை முடிந்த பின்பு வாடகையை மறுமதிப்பீடு செய்து குத்தகைதாரர் சம்மதிக்கும் பட்சத்தில் அவருக்கு குத்தகைக்கு விட வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி விருதுநகர் நகராட்சி நிர்வாகம் கடந்த 1.4.2017 முதல் வாடகை நிர்ணயம் செய்து நகராட்சி கடைகளுக்கு 22.5.2017 அன்று நோட்டீஸ் அனுப்பியது.

இந்த வாடகை உயர்வை ஆட்சேபித்து நகராட்சி கடைதாரர்கள் சிலர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்தனர். இந்தமனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன், வாடகைதாரர்கள் உயர்வு செய்யப்பட்ட வாடகை தொகையில் 50 சதவீத தொகையை செலுத்திய பின்னர் தங்கள் ஆட்சேபனையை நகராட்சி நிர்வாகத்திடம் பதிவு செய்ய வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகம் அதனை விதிமுறைகளின் படி பரிசீலித்து வாடகையை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவு 1.4.2017 முதல் வாடகை உயர்வு செய்யப்பட்டதை தொடர்ந்தே தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஆகும். இந்த மனுக்கள் விசாரணையின் போது நகராட்சி நிர்வாகமும், வாடகை உயர்வு தொகை 1.4.2017 முதல் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் விருதுநகர் நகராட்சி நிர்வாகம் கடந்த 5.1.2018 அன்று அனைத்து நகராட்சி கடை வாடகைதாரர்களுக்கும் 1.4.2016 முதல் வாடகை உயர்வு தொகையை செலுத்த வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவுப்படி இதில் 50 சதவீதவாடகை தொகை செலுத்தி விட்டு தங்கள் விளக்கத்தை பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு முரணானதாகும். 1.4.2017 முதலான வாடகை உயர்வுக்கே மதுரை ஐகோர்ட்டு நிபந்தனைகளை விதித்து வாடகை நிர்ணயம் செய்யுமாறு நகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் நகராட்சி நிர்வாகம் அதற்கு மாறாகவும், கடந்த 22.5.2017 அன்று அனுப்பிய நோட்டீசுக்கு முரணாகவும் 1.4.2016 முதல் வாடகை உயர்வை செலுத்த வேண்டும் என்று தெரிவித்து இருப்பது ஏற்புடையது அல்ல.

எனவே விருதுநகர் நகராட்சி ஆணையர் நகராட்சி கடை வாடகை உயர்வினை மதுரை ஐகோர்ட்டு விதித்த நிபந்தனையின் படி 1.4.2017 முதல் வாடகை உயர்வுக்கான 50 சதவீத தொகையை பெற்றுக்கொண்டு வாடகைதாரர்களின் விளக்கத்தை பரிசீலித்து மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என நகராட்சி கடை வியாபாரிகள் சார்பில் கோரப்பட்டுள்ளது.

Next Story