முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு: 13 மதகுகளையும் இயக்கி சோதனை


முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு: 13 மதகுகளையும் இயக்கி சோதனை
x
தினத்தந்தி 7 March 2018 3:45 AM IST (Updated: 7 March 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது 13 மதகுகளையும் இயக்கி பார்த்தனர்.

தேனி,

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த அணையின் நீர்மட்ட உயர்வை கண்காணித்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்பார்வை செய்தல் போன்ற பணிகளுக்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவுக்கு உதவியாக 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. துணை கண்காணிப்பு குழுவினர் அணையில் அவ்வப்போது ஆய்வு செய்து, அணை நிலவரம் குறித்து மூவர் கண்காணிப்பு குழுவுக்கு அறிக்கை அளித்து வருகின்றனர். கடைசியாக கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி அணையில் ஆய்வு செய்து இருந்தனர்.

இந்த நிலையில், மூவர் கண்காணிப்பு குழுவின் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பு குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் நேற்று ஆய்வு செய்தனர். அவர்கள் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடியில் இருந்து படகு மூலம் அணைக்கு சென்றனர். கேரள அரசின் பிரநிதிகளான கேரள நீர்ப்பாசனத்தறை பொறியாளர் சாஜி ஐசக், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் வல்லக்கடவு வழியாக ஜீப் மூலம் அணைக்கு சென்றனர்.

இந்த குழுவினர் அணைக்கு சென்ற போது அணையின் நீர்மட்டம் 113.50 அடியாக இருந்தது. முல்லைப்பெரியாறு அணை, பேபி அணை, மதகு பகுதிகள் ஆகியவற்றை பார்வையிட்டனர். பின்னர் அணையின் சுரங்கப்பகுதிக்கு சென்று கசிவுநீர் அளவை சேகரித்தனர்.

ஆய்வைத் தொடர்ந்து தேக்கடிக்கு திரும்பினர். பின்னர், குமுளி 1-ம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஆய்வின் போது கேரள பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அணையில் உள்ள 13 மதகுகளையும் இயக்கி, சோதனை நடத்தப்பட்டது. மதகுகள் மேலே ஏற்றி, பின்னர் இறக்கப்பட்டது. மதகுகள் நல்ல நிலையில் உள்ளன. கசிவுநீர் அளவு எடுத்ததில், ஒரு நிமிடத்தில் 22.71 லிட்டர் என்ற அளவில் இருந்தது. அணையின் தற்போதைய நீர்மட்டத்துக்கு இந்த அளவு என்பது இயல்பானதே. இதுகுறித்த அறிக்கை மூவர் கண்காணிப்பு குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்றனர். 

Next Story