10 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.75 லட்சம் கடனுதவிகள் அமைச்சர் வழங்கினார்


10 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.75 லட்சம் கடனுதவிகள் அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 7 March 2018 4:15 AM IST (Updated: 7 March 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு துறை சார்பில் கொலசனஅள்ளியில் 10 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா கொலசனஅள்ளியில் கூட்டுறவு துறை சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் ராமமூர்த்தி, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்க தலைவர் நடராஜன் வரவேற்றார். விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 10 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.75 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.

விழாவில் அமைச்சர் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் 2017-2018-ம் ஆண்டில் கூட்டுறவு துறையின் சார்பில் ரூ.7ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ரூ.124 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் கடந்த பிப்ரவரி மாதம் வரை தர்மபுரி மாவட்டத்தில் 29,540 விவசாயிகளுக்கு ரூ.142 கோடியே 86 லட்சம் கடனுதவி வழங்கி சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.16 கோடியே 85 லட்சம் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 1,844 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.8 கோடியே 44 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.45 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில் இலக்கை தாண்டி 452 பயனாளிகளுக்கு ரூ.90 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. இதேபோன்று சிறுவணிக கடனாக ரூ.2 கோடியே 55 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த இலக்கை தாண்டி இதுவரை 2,650 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 15 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கடனுதவிகளை பெறும் பயனாளிகள் அவற்றை முறையாக செலுத்தி கூட்டுறவு துறை மேலும் சிறந்து விளங்க உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நாகராஜன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் கோபால், மாணிக்கம், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, பழனிசாமி, நல்லத்தம்பி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார். 

Next Story