காலாசவுக்கியில் குடோனில் பயங்கர தீ விபத்து


காலாசவுக்கியில் குடோனில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 7 March 2018 3:36 AM IST (Updated: 7 March 2018 3:36 AM IST)
t-max-icont-min-icon

மும்பை காலாசவுக்கியில் குடோன் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. புகையின் காரணமாக மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

மும்பை,

மும்பை லால்பாக் அருகில் உள்ள காலாசவுக்கியில் பெரிய குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் பழைய இரும்பு பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் திடீரென குடோன் தீப்பிடித்து எரிந்தது. குடோனில் இருந்து கரும்புகை குபுகுபுவென வெளியேறியது. இதனால் சிறிது நேரத்தில் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்திற்கு 16 வாகனங்களில் விரைந்து வந்தனர். நாலாபுறமும் சுற்றி நின்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினார்கள். இதற்கிடையே புகை சூழ்ந்ததன் காரணமாக அங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருபவர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.

அவர்களை தீயணைப்பு படையினர் வீடுகளில் இருந்து பத்திரமாக வெளியேற்றினர்.

இந்த நிலையில், சுமார் 2½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டது. இருப்பினும் இந்த தீ விபத்தில் குடோன் முற்றிலும் எரிந்து நாசமானது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story