நாளை முதல் பெண்களே நிர்வகிக்கும் ரெயில் நிலையமாகிறது மாட்டுங்கா ரோடு


நாளை முதல் பெண்களே நிர்வகிக்கும் ரெயில் நிலையமாகிறது மாட்டுங்கா ரோடு
x
தினத்தந்தி 7 March 2018 3:41 AM IST (Updated: 7 March 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

மாட்டுங்கா ரெயில் நிலையத்தை தொடர்ந்து, நாளை முதல் மாட்டுங்கா ரோடு ரெயில் நிலையமும் பெண்களே நிர்வகிக்கும் ரெயில் நிலையமாகிறது.

மும்பை,

பெண்கள் அதிகாரத்தை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாக மும்பையில் மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள மாட்டுங்கா ரெயில் நிலையம் கடந்த ஆண்டு முதல் முழுக்க, முழுக்க பெண்களே நிர்வகிக்கும் ரெயில் நிலையமாக மாற்றப்பட்டது. இதன் மூலம் நாட்டிலேயே பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் முதல் ரெயில் நிலையம் என்ற பெயரை மாட்டுங்கா ரெயில் நிலையம் பெற்றது. இதற்காக அந்த ரெயில் நிலையம் லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தது.

இந்தநிலையில், மேற்கு ரெயில்வே தனது வழித்தடத்தில் உள்ள மாட்டுங்கா ரோடு ரெயில் நிலையத்தை பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் ரெயில் நிலையமாக மாற்ற முடிவு செய்திருக்கிறது. பெண்கள் தினமான நாளை(வியாழக்கிழமை) முதல் அந்த ரெயில் நிலையம் முழுக்க, முழுக்க பெண் ஊழியர்களே நிர்வகிப்பதற்கு ஒப்படைக்கப்படுகிறது.

ரெயில் நிலைய மேலாளர், டிக்கெட் பரிசோதகர்கள், அறிவிப்பாளர்கள் உள்ளிட்ட மாட்டுங்கா ரோடு ரெயில் நிலையத்தின் அனைத்து பிரிவுகளிலும் பெண்களே பணிபுரிய உள்ளனர்.

இதன் மூலம் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் பெண்களே நிர்வகிக்கும் முதல் ரெயில் நிலையம் என்ற பெயரை மாட்டுங்கா ரோடு ரெயில் நிலையம் பெறுகிறது.

இந்தநிலையில், மத்திய ரெயில்வே வழித்தடத்தில் மும்பை- புனே இடையே இயக்கப்படும் டெக்கான் குயின் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாளை முதல் முழுவதும் பெண் ஊழியர்களை பணியமர்த்த மத்திய ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.

நாளை டெக்கான் குயின் எக்ஸ்பிரஸ் ரெயிலை சுரேகா யாதவ் என்ற பெண் டிரைவர் இயக்குவார் என தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story