347 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை


347 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
x
தினத்தந்தி 7 March 2018 5:32 AM IST (Updated: 7 March 2018 5:32 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமில் 347 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

வேலூர்,

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்கள் அனைத்தும் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடைய முகாம்கள் நடத்தி தகுதியானவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள அட்டையின் மூலம் மாற்றுத்திறனாளிகள் அரசு வழங்கும் 52 வகையான சலுகைகளை பெற முடியும்.

வேலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமையன்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அடையாள அட்டை பெற்று வருகின்றனர்.

அதன்படி இந்த மாதத்துக்கான சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் செந்தில்குமாரி தலைமை தாங்கினார். இதில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

சிறப்பு முகாமில், கண் டாக்டர்கள் சுகிந்தர், குழந்தைகள்நல டாக்டர் உதயதீபா, மனநல டாக்டர் செந்தில்குமார், எலும்பு முறிவு அறுவை சிகிச்சை டாக்டர்கள் சுரேஷ், கீர்த்தி மற்றும் டாக்டர் தன்வீர் அகமது ஆகியோர் கலந்து கொண்டு விண்ணப்பதாரர்களை வரிசையாக பரிசோதனை செய்தனர்.

இதில், தகுதியுடைய 347 மாற்றுத்திறனாளிகளுக்கு நேற்று ஒரே நாளில் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், விண்ணப்பித்த 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மை குறித்து கண்டறிவதில் சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு எக்ஸ்-ரே, ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மூலம் மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மை கண்டறியப்படும். 40 சதவீதத்துக்கு மேல் ஊனத்தின் தன்மை காணப்பட்டால் அவர்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெறும் சிறப்பு முகாமில் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story