போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு 20 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள் போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் தகவல்


போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு 20 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள் போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் தகவல்
x
தினத்தந்தி 8 March 2018 2:00 AM IST (Updated: 7 March 2018 8:45 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில், போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை 20 ஆயிரம் பேர் எழுத இருப்பதாக, போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் தெரிவித்து உள்ளார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில், போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வை 20 ஆயிரம் பேர் எழுத இருப்பதாக, போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

போலீஸ் வேலை

தமிழக காவல்துறையின் சார்பில் 2017–2018–ம் ஆண்டில் புதிதாக ஆண், பெண் போலீஸ், சிறைகாவலர்கள், தீயணைப்பு படை வீரர்கள் தேர்வு குறித்து எழுத்து தேர்வு, தமிழகம் முழுவதும் வருகிற 11–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, சாராள்தக்கர் மகளிர் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகம், எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி, ரோஸ்மேரி மேல்நிலைப்பள்ளி, வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் மெட்ரிக்குலேசன் பள்ளி, தாமிரபரணி பொறியியல் கல்லூரி, சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி, ஆலங்குளம் சர்தார்ராஜா பொறியியல் கல்லூரி, பி.எஸ்.என். பொறியியல் கல்லூரி, எப்.எக்ஸ். பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் இந்த எழுத்து தேர்வு நடக்கிறது. இதில் 20 ஆயிரத்து 117 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

செல்போனுக்கு அனுமதியில்லை

தேர்வு எழுத தகுதி உடையவர்கள் 20 ஆயிரத்து 117 பேரும் ஹால்டிக்கெட்டை www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். ஹால்டிக்கெட்டில் புகைப்படம் இல்லை என்றால் புகைப்படம் ஒட்டி அரசு அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்கி விண்ணப்ப படிவ எண் மற்றும் விண்ணப்பம் அனுப்பியதற்கான ஆதார சான்றுகளை சமர்பித்து தேர்வு எழுதலாம்.

எழுத்து தேர்வு எழுத வருகிறவர்கள் சரியாக காலை 9 மணிக்குள் தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும். தேர்வு 10 மணிக்கு தொடங்கி 11.20 மணிக்கு முடியும். காலதாமதமாக வருகிறவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஹால்டிக்கெட், அடையாள அட்டை, பேனா, அட்டை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வர அனுமதி கிடையாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story