காங்கிரஸ் பிரமுகர் படுகொலை வழக்கு: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டனர்


காங்கிரஸ் பிரமுகர் படுகொலை வழக்கு: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டனர்
x
தினத்தந்தி 8 March 2018 5:00 AM IST (Updated: 8 March 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் பிரமுகரான மாறன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

புதுச்சேரி,

புதுவை வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மாறன் (வயது 55). காங்கிரஸ் பிரமுகர். இவரை மர்ம கும்பல் ஒன்று நேற்று முன்தினம் இரவு வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் மாறனை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யும் வரை அவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆம்பூர் சாலை-செஞ்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பெரியகடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அவர்களிடம் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் போலீசாரின் பேச்சுவார்த்தையை பொதுமக்கள் கேட்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கவர்னர் மாளிகையில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். கவர்னர் மாளிகை முன்பு முற்றுகை போராட்டம் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.

இதுபற்றி அறிந்தவுடன் கவர்னர் கிரண்பெடி வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அங்கு திரண்டு இருந்த பெண்களிடம் நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்தார். அப்போது பெண்கள் கூறுகையில், ‘தங்கள் பகுதியில் கொலை சம்பவங்கள் நடக்கிறது. எங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை’ என்றனர்.

கவர்னர் கிரண்பெடி கூறுகையில், ‘கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். விரைவில் உங்கள் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்கிறேன். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. உங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை பெண்கள் கவர்னர் மாளிகைக்கு வந்து தெரிவியுங்கள். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.

இந்த கொலைக்கான காரணம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வைத்திக்குப்பம் பகுதியில் மூர்த்தி என்பவர் ரவுடியாக வலம் வந்தார். இவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மூர்த்தியின் மனைவி திலகா மீன் வியாபாரி ஆவார். கொலைசெய்யப்பட்ட மாறனின் தம்பியான நாராயணனுக்கும், மூர்திக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. தனது தம்பியான நாராயணனுக்கு மாறன் ஆதரவாக இருந்தார். இதற்கிடையே வைத்திக்குப்பம் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் மாறன் பொறுப்பு வகித்து வந்தார். மேலும் மாறனின் ஆதரவாளர்கள் சிலர் திலகாவை மீன் வியாபாரம் செய்யவிடாமல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி தனது கணவரிடம் தெரிவித்தார். இதனால் மூர்த்தி ஆத்திரமடைந்தார்.

இந்த நிலையில் முத்தியால்பேட்டை போலீசார் மூர்த்தி மீது 144 வழக்குப்பதிவு செய்து ஊருக்குள் நுழைய தடை விதித்தனர். இதற்கும் மாறன் தான் காரணம் என மூர்த்தி கருதினார். எனவே அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி நேற்று முன்தினம் மூர்த்தி தனது கூட்டாளிகளுடன் சென்று மாறனை கொலை செய்துவிட்டு தப்பிவிட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த கொலை தொடர்பாக பெரியகடை போலீசார் விசாரணை நடத்தி முதற்கட்டமாக வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த மூர்த்தி, சுகு என்கிற சுகுமாறன், விக்னேஷ் என்ற விக்னேஷ்வரன், உதயா என்கிற மாணிக்கம், குணசேகரன், வினோத், கன்னுக்குட்டி கணேஷ், திலகா (மூர்த்தியின் மனைவி) ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். மாறனை கொலை செய்துவிட்டு மூர்த்தி மற்றும் அவருடைய கூட்டாளிகள் கடலுக்குள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். 

Next Story