எச்.ராஜாவை கைது செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எச்.ராஜாவை கைது செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 March 2018 4:15 AM IST (Updated: 8 March 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

எச்.ராஜாவை கைது செய்யக்கோரி, திண்டுக்கல்லில் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

பெரியார் குறித்து பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், நேற்று திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில பிரசார குழு செயலாளர் துரை சம்பத் தலைமையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் திடீரென சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும், பெரியார் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. கிழக்கு மாவட்ட துணை செயலாளர் நாகராஜன், ம.தி.மு.க. நகர செயலாளர் செல்வேந்திரன், திராவிட இயக்க தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் யாழ் பிலேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அன்பரசு, தமிழ் புலிகள் அமைப்பின் மாவட்ட செயலாளர் போஸ், எஸ்.டி.பி.ஐ. கட்சி முபாரக் அலி, ஆதித்தமிழர் பேரவை காளிராஜன், முஸ்லிம் முன்னேற்ற கழகம் யாசர் அராபத் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதையொட்டி, பெரியார் சிலையை சுற்றி இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல, கரூர் சாலையில் எம்.வி.எம். நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகம் முன்பும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல், வடமதுரை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சார்பில் வடமதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சாமிநாதன் தலைமையில் அக்கட்சியினர் எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வடமதுரை போலீசார் உருவ பொம்மையில் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் சாமிநாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மணிகண்டன், ரவி உள்பட 10 பேரை கைது செய்தனர்.

வேடசந்தூரில் பஸ் நிலையம் மற்றும் பெருமாள்கவுண்டன்பட்டியில் பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Next Story