அடகு வைத்த நகையை திருப்பி கேட்ட புரோட்டா மாஸ்டருக்கு அடி-உதை 2 பேர் கைது


அடகு வைத்த நகையை திருப்பி கேட்ட புரோட்டா மாஸ்டருக்கு அடி-உதை 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 March 2018 3:45 AM IST (Updated: 8 March 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

பொன்மலைப்பட்டி அருகே அடகு வைத்த நகையை திருப்பி கேட்ட புரோட்டா மாஸ்டரை அடித்து உதைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி பொன்மலைப்பட்டி அருகே உள்ள கொட்டப்பட்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜகுபர் சாதிக். இவரது மகன் முகமது யாசின் (வயது35).இவர் ஒரு உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். பொன்மலைப்பட்டி குமரன் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் சுதர்சன் (36) கடலை வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் இரண்டு மாதத்திற்கு முன்பு முகமது யாசின் ஒன்றரை பவுன் தங்க நகையை கொடுத்து அடகு வைத்து பணம் வாங்கி தர சொன்னார். அதன்படி சுதர்சனும் நகையை வாங்கி கொண்டு அதனை அடகு வைத்து பணம் கொடுத்துள்ளார். அதில் ரூ.2 ஆயிரத்தை முகமது யாசினிடம் கொடுக்கவில்லை. அதன் பின்னர் அடகு வைத்த நகையை மீட்பதற்கான பணத்தை கொடுத்து நகையை மீட்டு வரும்படி கூறினார். ஆனால் அடகு வைத்த நகையை மீட்டு முகமது யாசினிடம் சுதர்சன் கொடுக்கவில்லையாம். இதனை நீண்ட நாட்களாக முகமது யாசின் கேட்டு வந்தார்.

ஆனால் சுதர்சன் நகையையும், பணத்தையும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. 2 நாட்களுக்கு முன்பு முகமது யாசின் நகை, பணத்தை கேட்டார். அப்போது முகமது யாசினுக்கும், சுதர்சனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென்று சுதர்சனும் அவருடைய நண்பருமான பொன்மலைப்பட்டி அண்ணா தெருவை சேர்ந்த ராமதாஸ் (35) என்பவரும் சேர்ந்து முகமது யாசினை அடித்து உதைத்தனர். இதில் முகமது யாசினுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சுதர்சன், ராமதாஸ் ஆகியோர் மீது வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Next Story