மதுரையில் எச்.ராஜா உருவப்படத்தை எரித்து போராட்டம்: பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் கைது


மதுரையில் எச்.ராஜா உருவப்படத்தை எரித்து போராட்டம்: பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் கைது
x
தினத்தந்தி 8 March 2018 4:00 AM IST (Updated: 8 March 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் எச்.ராஜா உருவப்படத்தை எரித்து போராட்டம் நடந்தது. பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

பெரியார் சிலை குறித்து பற்றி பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேசிய கருத்துக்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலையும் சேதப்படுத்தப்பட்டது. சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்தும், எச்.ராஜாவுக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மதுரையில் தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் தந்தை பெரியார் திராவிட கழகம், திராவிட விடுதலை கழகம், புரட்சிகர மாணவர் முன்னணி, வனவேங்கை பேரவையை சேர்ந்தவர்கள் நேற்று மேலமடை சந்திப்பில் திரண்டனர். அவர்கள் ஊர்வலமாக சென்று அந்த பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சிலர் எச்.ராஜாவின் உருவப்படத்தை எரித்தனர். அதைதொடர்ந்து திராவிடர் விடுதலை கழகம் மணிஅமுதன் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று மே 17 இயக்கத்தினர் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இந்த இயக்கத்தை சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் கதிரவன் தலைமையில் அந்த கட்சியினர் நேற்று தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு கூடினர். அவர்கள் எச்.ராஜாவுக்கு எதிராக கோஷம் போட்டு, அவரது உருவப்படத்தை தீ வைத்து எரித்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவனியாபுரத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தினர், மக்கள் அதிகாரம் அமைப்பினர், வக்கீல்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மதுரை மாவட்ட கோர்ட்டில் இருந்து ஊர்வலமாக வந்து அவுட்போஸ்ட் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் அவர்கள் எச்.ராஜாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 34 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Next Story