நண்பரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த தரகர் கைது


நண்பரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த தரகர் கைது
x
தினத்தந்தி 9 March 2018 4:15 AM IST (Updated: 9 March 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

தொழில் தொடங்க கடன் வாங்கி தருவதாக கூறி நண்பரிடம் நூதன முறையில் ரூ.15 லட்சம் மோசடி செய்த ஷேர் மார்க்கெட் தரகரை போலீசார் கைது செய்தனர்.

அம்பத்தூர்,

சென்னை பெரவள்ளூர் 18-வது மெயின் ரோடு 3-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் குமார்(வயது 40). தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த இவர், தனியாக தொழில் தொடங்க முடிவு செய்து வேலையை ராஜினாமா செய்தார். அதில் கிடைத்த பணம் மற்றும் சேமிப்பு பணம் என ரூ.15 லட்சம் வைத்திருந்தார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வெங்கம்பாக்கம் என்ற இடத்தில் இடம் வாங்கி அங்கு குடிநீர் கம்பெனி தொடங்க முடிவு செய்தார். இதற்காக தனது நண்பரான கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த லோகேஷ்(33) என்பவரை அணுகி தன்னுடன் சேர்ந்து தொழில் செய்ய பங்குதாரராக வருமாறு அழைத்தார்.

லோகேஷ், திருப்பதியில் எல்.எல்.பி. சட்ட படிப்பு முடித்து, சென்னை ஷேர் மார்க்கெட் தரகராக உள்ளார். இருவரும் சேர்ந்து குடிநீர் கம்பெனி தொடங்க முடிவு செய்தனர். அதற்கு ரூ.25 லட்சம் தேவை என்று கூறிய லோகேஷ், ஏற்கனவே உன்னிடம் ரூ.15 லட்சம் உள்ளது. கூடுதலாக 10 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அதை சூரப்பட்டில் உள்ள தனக்கு தெரிந்த பைனான்சியர் ஒருவரிடம் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருகிறேன் என கூறினார்.

இதற்கு குமாரும் ஒப்புக்கொண்டார். அதன்படி தன்னிடம் இருந்த ரூ.15 லட்சத்துடன் குமார், லோகேஷ் இருவரும் சூரப்பட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். வழியில் சிறுநீர் கழிக்க மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு குமார் சாலையோரம் ஒதுங்கினார்.

அப்போது லோகேஷ், குமாரின் ரூ.15 லட்சம் பணத்துடன் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டார். அதிர்ச்சி அடைந்த குமார், லோகேஷின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

இந்த மோசடி குறித்து குமார் அளித்த புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேஷை தேடி வந்தனர். இதற்கிடையில் மதுராந்தகம் பகுதியில் பதுங்கி இருந்த லோகேஷை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.

நண்பர் குமாரிடம் இருந்து ரூ.15 லட்சத்தை அபகரிக்க முடிவு செய்த லோகேஷ், இதற்காக கூடுவாஞ்சேரியில் இருந்து மதுராந்தகம் பகுதியில் புதிதாக வீடு பார்த்து குடியேறினார். பின்னர் குமாரிடம் இருந்து மோசடி செய்த பணத்தில் புதிதாக கார் ஒன்றும் வாங்கி உள்ளார்.

கைதான லோகேஷிடம் இருந்து ரூ.11 லட்சம் மற்றும் புதிதாக வாங்கிய கார், அத்துடுன் கார் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் செலுத்திய ரசீது ஆகியற்றை பறிமுதல் செய்தனர். கைதான லோகேஷிடம் அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொற்கொடி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story