பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது


பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 9 March 2018 4:15 AM IST (Updated: 9 March 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுவதால், குடிநீர் திட்டங்கள் பாதிக்கும் அபாயம் நிலவுகிறது.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பில்லூரில் இயற்கை எழில் சூழ பில்லூர் அணை உள்ளது. இதற்கு நீலகிரி மற்றும் கேரளாவில் பெய்யும் மழைநீர் ஆதாரமாக விளங்குகிறது. பில்லூர் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் பவானி ஆறாக ஓடுகிறது. இதன் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 15-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகின்றன. இது மட்டுமின்றி ஆற்றின் கரையோர விளை நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில் பருவமழை பொய்த்து விட்டதால், தற்போது கோடை காலம் முன்கூட்டியே தொடங்கி உள்ளது. இதனால் வனப்பகுதியில் செடி, கொடிகள் கருகி வருகின்றன. நீர் நிலைகளும் வறண்டு காணப்படுவதால், வனவிலங்குகள் தண்ணீரை தேடி, இடம்பெயர தொடங்கிவிட்டன. மேலும் அணைகளில் நீர் மட்டமும், ஆறுகளில் தண்ணீர் வரத்தும் குறைந்து வருகிறது. இதனிடையே பவானி ஆற்றில் மின் உற்பத்திக்காக உள்ள 2 நீர்மின் நிலையங்களிலும் கதவணைகளில் தண்ணீர் தேக்கப்படுவதால், ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

இதனால் குடிநீர் திட்டங்கள் பாதிக்கும் அபாய நிலை காணப்படுகிறது. போதிய பாசன வசதி இன்றி விளைநிலங்களில் பயிர்களும் கருகுவதால், விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். காரமடை ஒன்றியத்தில் ரூ.42 கோடியே 94 லட்சம் செலவில் குடிநீர் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சிக்கதாசம்பாளையம், பெள்ளாதி, ஜடையம்பாளையம், சிக்கராயம்பாளையம், பள்ளேபாளையம், இலுப்பநத்தம், இரும்பறை, மூடுதுறை, சின்னகள்ளிப்பட்டி ஆகிய 9 ஊராட்சியில் 185 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு தேவையான இயல்பு நீர், மூலையூர் அருகே பவானி ஆற்றில் இருந்து 5 மீட்டர் விட்டமுள்ள நீர் சேகரிப்பு தொட்டிக்கு மின் இறைப்பான் மூலம் உந்தப்பட்டு, குழாய்கள் மூலம் பால்காரன் சாலையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் தற்போது பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் மின் இறைப்பான் மூலம் நீர் சேகரிப்பு தொட்டிக்கு தண்ணீரை உந்த முடியாத நிலை உள்ளது.

இதற்கிடையே ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. மூலையூர் அருகே உள்ள அந்த நீர்சேகரிப்பு தொட்டியை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க ஆற்றின் கீழ் பகுதியில் தண்ணீரை தேக்கி குழாய் மூலம் தண்ணீரை ஏற்றவும், பவானி நீர் மின்நிலையங்களில் மின் உற்பத்தி செய்யும் நேரத்தை குறைக்கவும், மின் உற்பத்திக்கு தண்ணீரை தேக்கும்போது கதவணைகளில் கதவை சற்று திறந்து தண்ணீர் வெளியேற்றவும் சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

இது தவிர குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஊராட்சிகளில் தேவையான இடங்களில் புதிய ஆழ்துளை கிணறுகளை அமைக்கவும், பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை ஆழப்படுத்தி பழுது நீக்கவும் தேவையான நடவடிக்கையை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை வலியுறுத்தினார்.

Next Story