தொழிலாளி மனைவி குத்திக்கொலை: பெண்ணுக்கு ஆயுள் தண்டனை கோர்ட்டு தீர்ப்பு


தொழிலாளி மனைவி குத்திக்கொலை: பெண்ணுக்கு ஆயுள் தண்டனை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 9 March 2018 4:30 AM IST (Updated: 9 March 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் தொழிலாளியின் மனைவி குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி புதுக்குடியிருப்பு ரோச் தெருவை சேர்ந்தவர் மிக்கேல், தொழிலாளி. இவருடைய மனைவி ஹெலன் (வயது 48). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராஜன் (50). ஹெலனுக்கும், ராஜனின் மனைவி ரமணி என்ற ரமணிதேவி (49) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

ரோச் தெருவில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தொட்டியில் தண்ணீர் நிரப்ப மோட்டார் போட்டு விடும் பொறுப்பை ஹெலன் கவனித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 1-7-2010 அன்று தெருவில் உள்ள தண்ணீர் தொட்டியில் ரமணி தண்ணீர் பிடிப்பதற்காக சென்றார். அப்போது தொட்டியில் தண்ணீர் இல்லை. அதைத் தொடர்ந்து தொட்டியில் தண்ணீர் நிரப்ப எதற்காக மோட்டார் போடவில்லை? என்று கூறி ஹெலனிடம், ரமணி தகராறு செய்தார். மேலும், ஹெலனின் உறவினர் மோட்டார் சைக்கிள் மீது கழிவுநீரையும் அவர் ஊற்றினார். இதன் காரணமாக ஹெலனுக்கும், ரமணிக்கும் தகராறு முற்றியது.

இதனால் ஆத்திரமடைந்த ரமணி, தன் கணவர் ராஜனுடன் மறுநாள் ஹெலன் வீட்டுக்கு சென்றார். அங்கு தனியாக இருந்த ஹெலனை, ரமணியும், ராஜனும் சேர்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜன், ரமணி ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள மகிளா கோர்ட்டில் நடந்தது. வழக்கை நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோஷம் விசாரித்து வந்தார். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது ஜாமீனில் வெளியே வந்த ராஜன் திடீரென தலைமறைவாகி விட்டார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அவர் மீது பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஹெலன் கொலை வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. ராஜன் தலைமறைவாக இருப்பதால், அவருடைய மனைவி ரமணி மட்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட ரமணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோஷம் தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மீனாட்சி ஆஜராகி வாதாடினார். 

Next Story