அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பண பட்டுவாடா தாமதம் விவசாயிகள் அவதி


அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பண பட்டுவாடா தாமதம் விவசாயிகள் அவதி
x
தினத்தந்தி 9 March 2018 4:15 AM IST (Updated: 9 March 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பண பட்டுவாடா தாமதமாவதால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மெலட்டூர்,

தஞ்சை மாவட்டத்தில் சம்பா பருவத்தையொட்டி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இங்கு தற்போது நெல் கொள்முதல் பணி விறு,விறுப்பாக நடைபெற்று வருகிறது. பாபநாசம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உடனடியாக பணம் வழங்கப்படுவதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான பணத்தை பட்டுவாடா செய்வதற்கு 7 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை ஆவதால் அவதிப்பட்டு வருவதாகவும், உடனடி பணம் தேவைக்காக தனியார் நெல்கொள்முதல் நிலையங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் விவசாயிகள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து மெலட்டூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

விலை நிர்ணயம்

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. 41 கிலோ எடை கொண்ட சன்ன ரக நெல்லுக்கு ரூ.640 எனவும், மோட்டா ரக நெல்லுக்கு ரூ.610 எனவும் அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. நெல் கொள்முதல் செய்யப்பட்டதும் உடனடியாக பணம் பட்டுவாடா செய்யப்படுவதில்லை. நெல்லுக்கான தொகையில் கொள்முதல் நிலைய ஊழியர்கள் பணம் பிடித்தம் செய்வதாக புகார்கள் வந்ததால், கடந்த ஆண்டு முதல் நெல்லுக்கான பணத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தும் நடைமுறையை அரசு அமல்படுத்தியது. இந்த முறையால் விவசாயிகளுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. மாறாக பணம் கிடைக்க 10 நாட்கள் வரை தாமதமாகி, கடும் சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறோம்.

கொள்முதல் நிலையத்தில் ஒரு மூட்டை நெல்லுக்கு ரூ.24 முதல் ரூ.30 வரை விவசாயிகளிடம் வசூலிக்கப்படுகிறது. அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் பல ஆண்டுகளாக முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நெல் கொள் முதல்நிலையங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும். அதேபோல நெல்லுக்கான பணம் ஓரிரு நாட்களில் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

வங்கி கணக்கு விவரங்கள்

பணம் கிடைக்க தாமதமாவதாக விவசாயிகள் கூறும் புகார் குறித்து நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் கூறியதாவது:- கொள்முதல் செய்யப்படும் நெல் அளவும், விவசாயிகளின் பெயர், வங்கி கணக்கு விவரங்களை ஒவ்வொரு நாளும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கொடுத்து விடுவோம். அதன் பின்னர் வங்கி கணக்கில் பணம் செலுத்துவது தொடர்பான பணிகளை அதிகாரிகள் தான் மேற்கொள்வார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார். 

Next Story