மாவட்ட செய்திகள்

கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு குழாய் பதிக்கும் பணி தொடக்கம் + "||" + Workshop to launch gas pipeline due to opposition from villagers

கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு குழாய் பதிக்கும் பணி தொடக்கம்
திருமக்கோட்டையில் கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு குழாய் பதிக்கும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது.
திருமக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருமக்கோட்டை கிராமத்தில் எரிவாயு சுழலி மின் நிலையம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் மூலமாக இயங்கி வருகிறது. இங்கு இயற்கை எரிவாயுவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மின் நிலையத்துக்கு அதே பகுதியில் உள்ள கோவில்களப்பால் கிராமத்தில் இருந்து இயற்கை எரிவாயுவை கொண்டு வருவதற்காக திருமக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நிலத்துக்கு அடியில் எரிவாயு குழாய்களை பதிக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முடிவு செய்தது.


அதன்படி குழாய் பதிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை ஓ.என்.ஜி.சி. மேற்கொண்டது. ஆனால் கிராம மக்கள், எரிவாயு குழாய்களை நிலத்துக்கு அடியில் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பணிகளை கைவிட வேண்டும் என்று கோரி பல்வேறு போராட்டங்கள் திருமக்கோட்டையில் நடைபெற்றன. இதையடுத்து குழாய் பதிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன.

மீண்டும் தொடங்கியது

கடந்த ஒரு ஆண்டாக எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் திருமக்கோட்டையில் நடைபெறவில்லை. இந்த நிலையில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், நில உரிமையாளர்களுடன் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை மீண்டும் தொடங்குவது குறித்து பேசப்பட்டது.

இதனிடையே திருமக்கோட்டையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த எரிவாயு குழாய் பதிக்கும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது. அங்கு அதிகாரிகள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை பொக்லின் எந்திரம் மூலமாக தோண்டி அதில் எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பரபரப்பு

கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக நிறுத்தப்பட்டிருந்த எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.