பெண்கள் சாதிக்க கல்வி கற்க வேண்டியது அவசியம்


பெண்கள் சாதிக்க கல்வி கற்க வேண்டியது அவசியம்
x
தினத்தந்தி 9 March 2018 3:16 AM IST (Updated: 9 March 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் சாதிப்பதற்கு அவசியம் கல்வி கற்க வேண்டும் என்று மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் நீனு இட்டியேரா பேசினார்.

மதுரை,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நேற்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்லத்துரை வரவேற்றார். பதிவாளர் சின்னையா முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி டோக்ரா பேசியதாவது:- ஆண்களைப்போல பெண்களுக்கு சம உரிமை இல்லாமல் இருப்பதே இன்றளவும் மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணமாக உள்ளது.

இந்த ஆண்டு, பெண்களின் முன்னேற்றத்திற்கான அழுத்தம் என்ற தலைப்பில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தான் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி ரூபா தைரியமாக சிறைத்துறையில் நடந்த ஊழலை வெளிப்படுத்தினார். இவரை போன்ற தைரியமான பெண்கள் நாடு முழுவதும் உள்ளனர்.

ஆனால், சர்வதேச சர்வே ஒன்று, தற்போதைய சாதனை தொடர்ந்தால் பெண்களுக்கு சம உரிமை கிடைக்க இன்னும் 217 வருடங்கள் ஆகும் என்று கூறுகிறது. ஆண்கள் செய்வதை எல்லாம் பெண்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பது தவறு. வேலைக்கு செல்லும் பெண்ணின் கணவர் வீட்டில் இருந்து வீட்டு வேலைகளையும், குழந்தைகளை கவனித்து கொள்வதில் தவறில்லை. பாலின வேறுபாட்டை நீக்கினாலே பெண்களுக்கு சம உரிமை கிடைத்து விடும். மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் நீனு இட்டியேரா பேசியதாவது.

பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிப்பதற்கு காரணம் கல்வி தான். உயர்கல்வி கற்கும் பெண்களே சமுதாயத்தில் சாதனையாளர்களாக திகழ்கின்றனர். பெண்களுக்கு ஆதரவு என்ற வார்த்தையை நான் விரும்புவதில்லை. பெண்கள் உயர் பதவிக்கு வந்தால் அவர்களுக்கு கூடுதல் சுமை வழங்கப்படுகிறது. ஆண்களைப்போல, பெண்களும் முயற்சித்தால் அந்த சுமையை தாங்க முடியும். நமது எதிர்பார்ப்பு எப்போதும் உயர்வாக இருக்க வேண்டும். பெண்களுக்கு, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பாதுகாப்பு, முன்னெச்சரிக்கையாக செயல்படுவது என்ற 2 சவால்கள் உள்ளன.

அலுவலகம் செல்லும் பெண்கள், ஆண் அதிகாரிகள், ஊழியர்களிடம் தயங்காமல் தைரியமாகவும், சகஜமாகவும் பேச வேண்டும். பெண்கள் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆண்களும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் தான். யாராக இருந்தாலும், அந்த நிலையில் எந்த முடிவையும் எடுக்க கூடாது.

பெண்கள் ஒரே நேரத்தில் பல காரியங்களை செய்யும் வல்லமை படைத்தவர்கள். ஆனால், செய்யும் காரியத்தில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். பெண்கள் வாழ்வில் முன்னேற கட்டாயம் வாகனங்கள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். முக்கிய இடங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும். புத்தகங்கள் படிக்க நேரம் ஒதுக்க வேண்டும்.

அதனை தொடர்ந்து, மதுரை ஐகோர்ட்டு மூத்த வக்கீல் கிருஷ்ணவேணி, வக்கீல் அபிஷா ஐசக், பேராசிரியர் விவேகானந்தன், பேராசிரியை ராஜசபாலா, பேராசிரியை எஸ்தர் செல்லத்துரை உள்ளிட்டோர் பேசினர்.

Next Story