சாலை ஓரம் வீசப்பட்ட ஆண் குழந்தை உயிருடன் மீட்பு


சாலை ஓரம் வீசப்பட்ட ஆண் குழந்தை உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 9 March 2018 3:26 AM IST (Updated: 9 March 2018 3:26 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே சாலை ஓரம் வீசப்பட்டு கிடந்த ஒரு மாத ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலூர்,

மேலூர் அருகே திருச்சி நான்கு வழிச்சாலையில் உள்ளது தும்பைப்பட்டி. இங்குள்ள குடியிருப்பு பகுதியில் சாலை ஓரம் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டு, அந்த வழியாக வந்த வள்ளி என்ற பெண், அந்த குழந்தையை மீட்டார். துணியில் பாதுகாப்பாக சுற்றி பிறந்து ஒருமாதம் ஆன நிலையில் உள்ள ஆண் குழந்தையை யாரோ சாலையின் ஓரத்தில் போட்டு விட்டு சென்றது தெரியவந்தது.

நெஞ்சில் ஈரமில்லாத கொடூர மனம் படைத்தவர்க்கும் குழந்தை என்றதும், இயற்கையாகவே இரக்கம் வந்துவிடும். ஆனால் 10 மாதம் சுமந்து பெற்று எடுத்து, அதை யாருமற்ற அனாதையாக, நாய், எறும்பு, பூச்சிகள் கடித்து குதறும் அளவிற்கு ரோட்டின் ஓரத்தில் துணியில் சுற்றி போட்டு விட்டு சென்ற கல்மனம் கொண்ட பெண் யார்? என்று அந்த பகுதி பொதுமக்கள் குழந்தையை பார்த்து விட்டு ஆதங்கப்பட்டு சென்றனர்.

தொடர்ந்து மீட்கப்பட்ட குழந்தை திறந்தவெளியில் கிடந்ததால், அதற்கு நோய் தொற்று பாதிக்காத வகையில் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் வந்து குழந்தையை பெற்றுக்கொண்டனர்.

பின்னர் மாவட்ட சமூக அலுவலரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த குழந்தை மதுரை காப்பகத்தில் சேர்க்கப்பட்டது. இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story