ரெயில்வே மேம்பால பணியை விரைவுபடுத்த வேண்டும்


ரெயில்வே மேம்பால பணியை விரைவுபடுத்த வேண்டும்
x
தினத்தந்தி 9 March 2018 4:43 AM IST (Updated: 9 March 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால திட்டப்பணியை விரைவுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் ரெயில்வே மேம்பால திட்டப்பணி கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத்துறையும், ரெயில்வே துறையும் இணைந்து இந்த பணியை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. மேம்பாலப் பணி இந்த மாத (மார்ச்) இறுதிக்குள் முடிக்கப்பட்டு மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலைத்துறையினர் அறிவித்து இருந்தனர். இதற்கான அறிவிப்பு பலகையும் ராமமூர்த்தி ரோட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நகரின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதிக்கு செல்வதற்கு பிரதான சாலையாக விளங்கிய ராமமூர்த்தி ரோட்டில் மேம்பால கட்டுமான பணி நடைபெறுவதால் வாகன போக்குவரத்து தந்திமரத்தெரு, வாடியான் தெரு போன்ற குறுகிய சாலை வழியாக மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளது. குறிப்பாக தந்திமரத்தெருவில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவித்துள்ள நிலையில் கார்களும், வேன்களும் அந்த வழியாக அனுமதிக்கப்படுவதால் அந்த தெருவில் வசிப்போருக்கு பெரும் சிரமம் ஏற்படுவதுடன் அந்த தெரு வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோரும், நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் இதனை முறையாக கண்காணிப்பது இல்லை.

இந்த நிலையில் விரைந்து முடிக்கப்பட வேண்டிய கட்டுமான பணி பல காலக்கட்டங்களில் முடக்கம் அடைந்தும், தாமதத்துக்குள்ளாகியும் வருகிறது. ரெயில்வே துறையினர் ரெயில்பாதை பகுதியில் தங்களது கட்டுமான பணிகளை முடித்து விட்ட நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் அவர்களது மேற்பார்வையில் நடைபெற்று வரும் கட்டுமானபணியை தாமதப்படுத்தி வருகின்றனர். மணல் தட்டுப்பாடு, இடுபொருட்கள் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் ராமமூர்த்தி ரோட்டில் குடிநீர் குழாய்கள் மற்றும் மின்கம்பங்கள் ஆகியவற்றை மாற்றி அமைப்பதில் நகராட்சி நிர்வாகமும், மின் வாரியமும் போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்படுகிறது. மேம்பால கட்டுமான பணியில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டியது அவசியம் ஆகும்.

தற்போது உள்ள நிலையில் ராமமூர்த்தி ரோட்டில் ரெயில்வே லெவல் கிராசிங் கிழக்குப் பகுதியில் 60 சதவீத பணிகள் நடந்துள்ள நிலையில் மேற்கு பகுதியில் 30 சதவீத பணிகளே முடிவடைந்துள்ளன. மேம்பாலம் பயன்பாட்டிற்கு வருவதற்கான காலக்கெடு இம்மாதம் இறுதியுடன் முடிவடையும் நிலையில் இந்த பணி எப்போது முழுமையாக முடிவடையும் என்று உறுதியாக சொல்ல முடியாத நிலை நீடிக்கிறது. பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருதி நெடுஞ்சாலைத்துறையினர் மேம்பால திட்டப்பணியை விரைவுபடுத்த தயாராக இல்லை.

எனவே மாவட்டநிர்வாகம் இந்த பணியை விரைவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதிக பட்சமாக இந்த ஆண்டு இறுதிக்குள்ளாவது பணியை முழுமையாக முடித்து மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டியது அவசியம் ஆகும். இல்லையேல் அடுத்த வருடம் தொடக்கத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் மேம்பால கட்டுமானப் பணி மேலும் தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டு விடும்.

Next Story