சவடு மண் என்ற பெயரில் இரவு,பகலாக ஆற்று மணல் திருட்டு


சவடு மண் என்ற பெயரில் இரவு,பகலாக ஆற்று மணல் திருட்டு
x
தினத்தந்தி 9 March 2018 4:47 AM IST (Updated: 9 March 2018 4:47 AM IST)
t-max-icont-min-icon

திருச்சுழி குண்டாற்றுப் பகுதியில் சவடு மண் என்ற பெயரில் ஆற்று மணல் திருட்டு அமோகமாக நடைபெற்று வருகிறது. அரசு அதிகாரிகளின் மெத்தனத்தால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

திருச்சுழி,

திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களை வளப்படுத்தும் விதமாக குண்டாறு அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சவடு மண் அள்ளுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன் பின்பு குண்டாற்றின் கிளை ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு கோர்ட்டு தடை விதித்தது.

இந்த நிலையில் பிசிண்டி, உடையனேந்தல், பச்சேரி, சேதுபுரம் ஆகிய பகுதிகளில் சவடு மண் என்ற பெயரில் 50 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி மணல் எடுக்கின்றனர். மேலும் போலிச் சீட்டு மூலம் மணல் அள்ளிச் செல்வதால் பல கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பது விவசாயிகளிடம் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மணல் திருட்டு நடப்பதால் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு விட்டன. மேலும் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி வருகின்றன.

இதுகுறித்து திருச்சுழி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், “கடந்த சில மாதங்களாக சவடு மண் என்ற பெயரில் அனுமதி பெற்று விட்டு ஆற்று மணலை அள்ளி கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர். சமீபத்தில் மணல் திருடிச் சென்ற 10-க்கும் மேற்பட்ட லாரிகளை அருப்புக்கோட்டை தாசில்தார் ரமணன் மடக்கிப் பிடித்தார். ஆனால் யாரோ சிலரின் வற்புறுத்தலின் பேரில் சிறிய வழக்குகள் மட்டும் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.

அதன் பிறகும் அதிகாரிகளின் உதவியுடன் குண்டாற்றுப் பகுதியில் அனுமதியின்றி ஆற்று மணலை இரவும், பகலும் அள்ளிக் கொண்டுதான் இருக்கின்றனர். இதனால் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி வருகின்றன. குடிநீர் ஆதாரங்கள் முற்றிலுமாக பாதிப்படைந்து வருகிறது” என்றனர்.

இது குறித்து கணேசன் என்ற சமூக ஆர்வலர் கூறுகையில், காரியாபட்டியில் இருந்து திருச்சுழி, இலுப்பையூர், மண்டலமாணிக்கம் ஆகிய கிராமங்கள் வழியாக குண்டாறு செல்கிறது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சிறிதளவு மழை பெய்தால் கூட வெள்ளம் அதிகரித்து குண்டாற்றில் நீர் வரத்து அதிகரித்து செல்லும்.

இதனால் நிலங்களில் இரு போக விளைச்சல் ஏற்பட்டு விவசாயிகள் பலன் அடைந்து வந்தனர். தற்போது கமுதி செல்லும் சாலையில் பனையூர், சேதுபுரம், இலுப்பையூர் மற்றும் வீரசோழன் போன்ற கிராமங்களில் உள்ள ஆற்றுப்படுகைப் பகுதிகளில் பல அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி மணல் எடுத்ததால் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு நிலத்தடி நீர் ஆதாரம் அதல பாதாளத்துக்குச் சென்று விட்டது.

இதனால் ஆற்றுப்படுகை ஓரமாக உள்ள கிணறுகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகின்றன. இப்பகுதி கிராம மக்கள் குடிநீர் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் போலிச் சீட்டுகள் மூலம் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் மணல் அள்ளுவது வருவாய்த் துறை அதிகாரிகள், போலீசாருக்கு தெரிந்தும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை.

எனவே திருச்சுழி பகுதிகளில் சவடு மண் என்ற பெயரில் ஆற்று மணல் கொள்ளைகளில் ஈடுபடும் நபர்கள் மீதும், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விவசாய நிலங்கள், குடிநீர் ஆதாரங்களை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story