உணவு பாதுகாப்புதுறை சார்பில் ஓட்டல் உரிமையாளர்களுக்கு பயிற்சி
உணவு பாதுகாப்புதுறை சார்பில் ஓட்டல் உரிமையாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
விழுப்புரம்,
ஓட்டல்களில் சுகாதாரமான உணவு வழங்குவது குறித்தும், உணவு பாதுகாப்பு பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஓட்டலிலும் உணவு பாதுகாப்பு மேலாளரை நியமிக்க வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு நியமித்தால் மட்டுமே உணவு பாதுகாப்புத்துறையிடம் இருந்து உரிமம் பெற வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனையொட்டி ஓட்டல்கள், உணவுப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவன உரிமையாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ள நிலையில் இதனை மேலும் சிறப்பாக செயல்படுத்த தமிழக உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஓட்டல் உரிமையாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு இதுகுறித்த பயிற்சி முகாம் விழுப்புரம் அர்ச்சனா ஓட்டலில் நடைபெற்றது. முகாமிற்கு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பி.சுப்புராமன் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் வரலட்சுமி முன்னிலை வகித்தார்.
முகாமில் தமிழ்நாடு ஓட்டல் சங்கங்களின் ஆலோசகரும் இந்திய அரசின் உணவு பாதுகாப்புத்துறை தலைமை திறன் நிபுணருமான டாக்டர் பசுபதி கலந்துகொண்டு உணவு பாதுகாப்பு மேலாளரை நியமிப்பது குறித்தும் அவர்களின் பணி, உணவு தர பரிசோதனை உள்ளிட்டவை குறித்தும் ஓட்டல் உரிமையாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி அளித்தார்.
இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி முடிந்த பிறகு அவர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முகாமில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நகர தலைவர் சந்திரசேகரன், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பிரபு, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், ஜெயராஜ், சையத்இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story