தூத்துக்குடியில், நாளை போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு 9,634 பேர் எழுதுகின்றனர்


தூத்துக்குடியில், நாளை போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு 9,634 பேர் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 10 March 2018 2:00 AM IST (Updated: 9 March 2018 9:06 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வை 9 ஆயிரத்து 634 பேர் எழுதுகின்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வை 9 ஆயிரத்து 634 பேர் எழுதுகின்றனர்.

எழுத்து தேர்வு

2017–18–ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த 2–ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான எழுத்து தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்க உள்ளது. இந்த தேர்வை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 8 ஆயிரத்து 465 ஆண்கள், 1,167 பெண்கள், 2 திருநங்கைகள் ஆக மொத்தம் 9 ஆயிரத்து 634 பேர் எழுதுகின்றனர்.

இதற்காக தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி, பி.எம்.சி. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, வ.உ.சி. என்ஜினீயரிங் கல்லூரி, காமராஜ் கல்லூரி, புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளி, புனித சேவியர் மேல்நிலைப்பள்ளி, தருவை மைதானம் அருகே உள்ள காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, விகாசா மெட்ரிக்குலேசன் பள்ளி, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 9 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தேர்வுக்கூட நுழைவு சீட்டு

அனைத்து விண்ணப்பதாரர்களும் எழுத்து தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவு சீட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவு சீட்டில் புகைப்படம் இல்லாத விண்ணப்பதாரர்கள், தங்களின் புகைப்படத்தை ஒட்டி அதன் மீது அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பம் பெற்று தேர்வுக்கு வரும்போது கொண்டுவர வேண்டும்.

எழுத்து தேர்வில் கலந்து கொள்ள வரும் விண்ணப்பதாரர்கள் சரியாக காலை 9 மணிக்கு தேர்வு மையத்துக்கு வர வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வு மையத்துக்குள் செல்போன், கால்குலேட்டர் கொண்டு செல்லக்கூடாது. அழைப்பு கடிதம், நீலம் அல்லது கருப்பு நிற பந்து முனை பேனா மற்றும் தேர்வு அட்டை கொண்டுவர வேண்டும்.

இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தெரிவித்து உள்ளார்.

விடைத்தாளில் தேர்வரின் புகைப்படம்

மேலும், முதல்முறையாக போலீஸ் எழுத்து தேர்வின்போது தேர்வர்களுக்கு வழங்கப்படும் விடைத்தாளில், தேர்வரின் புகைப்படம், பதிவு எண், பெயர் ஆகியவை அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. இதனால் விடைத்தாளில் பெயர் தவறுதலாக எழுதுவது தவிர்க்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி. அசோக்குமார் தாஸ் மேற்பார்வையில், போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் இந்த தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


Next Story