பல்லடம் அருகே பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி மாணவன் உள்பட 2 பேர் பலி


பல்லடம் அருகே பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி மாணவன் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 10 March 2018 4:00 AM IST (Updated: 10 March 2018 12:01 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே மீன்பிடித்த போது பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி மாணவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சின்னூரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 48), கட்டிட தொழிலாளி. இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (17). பல்லடம் வதப்பஞ்சேரியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். நேற்றுமுன்தினம் ஜெயப்பிரகாஷ் தனது பெற்றோரிடம் நண்பர்கள் வீட்டிற்கு படிக்க செல்வதாக கூறிவிட்டு மொபட்டில் சென்றான். அதுபோல் இவனது பக்கத்து வீட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளி நாகராஜின் மகன் மூவேந்தர் (15). 7-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தான். மூவேந்தரும் தனது நண்பர்களுடன் விளையாடச்செல்வதாக கூறி விட்டு சென்றான்.

இதையடுத்து ஜெயப்பிரகாசும், மூவேந்தரும் நேற்று முன்தினம் மொபட்டில் சென்றனர். அதன்பின்னர் அவர்கள் மாலை வரை வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியில்லை.

எனவே பாறைக்குழியில் குளிக்க சென்று இருப்பார்களோ என்ற சந்தேகத்தின் பேரில் பல்லடம் ஆராக்குளத்தில் உள்ள பாறைக்குழிக்கு தேடி சென்றனர். பாறைக்குழி அருகே ஒரு மொபட்டும், 2 ஜோடி காலணிகளும், மீன் பிடிக்கும் தூண்டிலும் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது அந்த மொபட் ஜெயப்பிரகாஷ் ஓட்டிச்சென்ற மொபட் என்பதும், காலணியில் ஒரு ஜோடி ஜெயப்பிரகாஷ் அணிவது என்றும், மற்றொரு காலணி மூவேந்தர் அணிந்து இருந்தது என்றும் தெரியவந்தது. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் பாறைக்குழி தண்ணீரில் இறங்கி அவர்களை தேடினார்கள். இதற்கிடையில் இரவு நேரம் ஆகி விட்டதால் அவர்களை தேட முடியவில்லை.

இதுபற்றி அறிந்த பல்லடம் தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று காலை அங்கு வந்த பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி கிடந்த ஜெயப்பிரகாஷ், மற்றும் மூவேந்தர் ஆகிய இருவரது உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்ற 2 பேரும் பாறைக்குழியில் மீன் பிடித்த போது தவறி விழுந்து தண்ணீர் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story