257 ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு


257 ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு
x
தினத்தந்தி 10 March 2018 4:15 AM IST (Updated: 10 March 2018 12:01 AM IST)
t-max-icont-min-icon

பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில், 257 ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நேற்று நிறைவுபெற்றது. இன்று உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

சென்னை,

சென்னை, பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் (ஓ.டி.ஏ.) உள்ளது. இங்கு, ராணுவத்தில் சேரும் அதிகாரிகளுக்கு 11 மாத போர் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

அந்தவகையில் நடப்பாண்டில் 257 ராணுவ அதிகாரிகள் போர் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களின் பயிற்சி நேற்று நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து, பயிற்சியை நிறைவு செய்த ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டனர்.

இதில், மூத்த ராணுவ அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு, ராணுவ அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.

இதுகுறித்து, தலைமை பயிற்சியாளர் மேஜர் ஜெனரல் வி.டி.சவ்குலே நிருபர்களிடம் கூறியதாவது:-

நடப்பாண்டில் இந்தியாவை சேர்ந்த 198 மாணவர்கள், 37 மாணவிகள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 19 மாணவர்கள், 3 மாணவிகள் என மொத்தம் 257 ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு பெற்று உள்ளது.

அதனை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதை மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

தென்பிராந்திய ராணுவ தளபதி திவான் ரவீந்திரநாத் சோனி இதற்கு தலைமை தாங்குகிறார். அவருக்கு, பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகள் அணிவகுப்பு நடத்தி மரியாதை செலுத்துகிறார்கள்.

அதன் பின்னர் ராணுவ அதிகாரிகள் உறுதிமொழி எடுத்து கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் சேர உள்ளனர்.

இந்த பயிற்சியில், பணியில் இருந்த போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களான, உத்தரபிரதேசத்தை சேர்ந்த மேஜர் பாண்டேயின் மனைவி சுஷ்மிதா பாண்டே மற்றும் உத்தரகாண்டை சேர்ந்த மேஜர் அமித் தேஷ்வாலின் (சேனா பதக்கம் பெற்றவர்) மனைவி நீட்டா தேஷ்வால் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story