வங்கி காப்பீட்டு அதிகாரி போல் நடித்து தனியார் மருத்துவமனையில் மோசடி செய்ய முயன்ற பெண் சிக்கினார்


வங்கி காப்பீட்டு அதிகாரி போல் நடித்து தனியார் மருத்துவமனையில் மோசடி செய்ய முயன்ற பெண் சிக்கினார்
x
தினத்தந்தி 10 March 2018 3:00 AM IST (Updated: 10 March 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

வங்கி காப்பீட்டு அதிகாரி போல் நடித்து தனியார் மருத்துவமனையில் மோசடி செய்ய முயன்ற பெண் சிக்கினார்.

ஈரோடு,

ஈரோடு சோலார் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் ஆனந்தி ஆவார். இந்த மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் வந்த பெண் ஒருவர் ஆனந்தியிடம், ‘தான் ஈரோடு பஞ்சாப் நேஷனல் வங்கியில் காப்பீட்டு அதிகாரியாக இருப்பதாவும், தன்னிடம் ரூ.2½ லட்சத்துக்கு காப்பீடு செய்தால், பல்வேறு சலுகைகள் கிடைக்கும்’ என்றும் ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

இதை நம்பிய ஆனந்தி அந்த பெண்ணிடம் நாளை (நேற்று) பணம் தருவதாக கூறி உள்ளார். அதன்படி அந்த பெண் நேற்று மதியம் மருத்துவமனைக்கு சென்று காப்பீட்டிற்கான ஆவணங்களை ஆனந்தியிடம் கொடுத்துள்ளார்.

அந்த ஆவணத்தில் ஆனந்திக்கு சந்தேகம் வந்தது. அதனால் அவர் ஈரோடு பஞ்சாப் நேஷனல் வங்கியை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது வங்கி அதிகாரிகள் அதுபோன்று நாங்கள் யாரையும் அனுப்பவில்லை என்று கூறி உள்ளனர்.

உடனே ஆனந்தி இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் தாலுகா போலீசார் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு விரைந்து சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண், ஈரோடு ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story