காரங்காடு கிராமத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் படகு சவாரி: பொதுமக்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பு


காரங்காடு கிராமத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் படகு சவாரி: பொதுமக்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 10 March 2018 3:15 AM IST (Updated: 10 March 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

காரங்காடு கிராமத்தில் கடலில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ளது காரங்காடு கிராமம். இங்குள்ள சுற்றுலா மையத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் இங்கு மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் சார்பில் படகு சவாரியும் ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. இந்த படகுகளில் சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் மாங்குரோவ் காடுகளின் அழகையும், பல்வேறு வகையான பறவைகளின் அழகையும் ரசித்து செல்கின்றனர்.

இந்த கிராமத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக இயற்கை தந்த கொடையாக அனைவருடைய மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. இது சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

படகு சவாரி செய்பவர்கள் இங்குள்ள காடுகளையும், கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து காரங்காடு வரை கோட்டக்கரை ஆற்றின் கழிமுக பகுதியான நல்ல தண்ணீரும், கடல் நீரும் ஒன்று சேரும் இடத்தில் இயற்கை அழகுடன் இருபுறமும் அமைந்துள்ள மாங்குரோவ் காடுகள், எப்போதும் இந்த மாங்குரோவ் காடுகளில் வசிக்கும் கடல்புறா, கொக்கு, சாம்பல் நாரை, கொக்கு, கடல் ஊழா, நீர்க்காகம் போன்ற பறவை கூட்டங்களையும் பார்த்து ரசிக்கின்றனர். மேலும் சீசன் காலங்களில் இங்கு வரும் பிளமிங்கோ, தேன்பருந்து, கடல் பருந்து, கூழைக்கிடா போன்ற எண்ணற்ற பறவைகளின் அழகையும் இங்குள்ள கண்காணிப்பு கோபுரம் மீது ஏறி நின்று பார்த்து ரசித்து செல்கின்றனர்.

படகு சவாரி செய்ய பெரியவர்களுக்கு ரூ.100-ம், சிறியவர்களுக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கையின் அழகை கரையில் இருந்தே ரசிக்க கடற்கரையில் ஓலை கூரை வேயப்பட்ட குடில்கள் அமைக்கப்பட்டுஉள்ளன. மேலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் எலுமிச்சை, தக்காளி, வெஜ் பிரியாணி, தயிர் சாதம் மற்றும் கலவை சாதங்களும், தேநீர், குளிர் பானங்கள் போன்றவையும் இங்கு கிடைக்கிறது. இங்கு படகு சவாரி செய்ய பாதுகாப்பு கவசம் மற்றும் வழி காட்டுனர் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுஉள்ளன. இதனால் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

Next Story