வீடு என நினைத்து தனியார் நிறுவன கதவை உடைத்து புகுந்த திருடன், பணம் இல்லாததால் ஏமாற்றம்


வீடு என நினைத்து தனியார் நிறுவன கதவை உடைத்து புகுந்த திருடன், பணம் இல்லாததால் ஏமாற்றம்
x
தினத்தந்தி 10 March 2018 2:45 AM IST (Updated: 10 March 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

வீடு என நினைத்து தனியார் நிறுவன அலுவலக கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடன், அங்கு பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றான்.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் சவுபர்னிகா கார்டன் பகுதியில் தனியார் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 7-ந் தேதி மாலை இந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணியை முடித்துக்கொண்டு வழக்கம்போல் அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று முன்தினம் காலை அவர்கள் வழக்கம்போல் அலுவலகத்துக்கு வந்தபோது அலுவலக கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அலுவலகத்துக்குள் சென்று பார்த்தபோது பீரோ, மேஜை திறந்து கிடந்தன. அவற்றில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள், கோப்புகள் சிதறிக்கிடந்தன.

அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றதும் யாரோ மர்ம ஆசாமி பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருட முயற்சித்திருப்பது தெரியவந்தது. அது குறித்து அலுவலக அதிகாரி வரதராஜ், அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது முகமூடி அணிந்த மர்ம ஆசாமி அலுவலக கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணம், பொருட்கள் ஏதேனும் கிடைக்குமா? என்று ஆராயும் காட்சிகளும், பீரோ பூட்டை உடைத்து திறந்து பார்ப்பதும், மேஜை டிராயரை திறந்து பார்ப்பதும் கேமராவில் பதிவாகியிருந்தன.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, “அந்த அலுவலகத்தை, பூட்டி கிடக்கும் பங்களா வீடு என நினைத்து திருடன் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம், நகை எதுவும் இருக்கிறதா? என பார்த்துள்ளான். ஆனால் அது ஒரு நிறுவனத்தின் அலுவலகம் என்பதும், அங்கு பணம் எதுவும் இல்லை என்பதையும் அறிந்த பின்னர் அவன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளான் என கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆராயும்போது தெரிகிறது” என்றனர்.

இந்த திருட்டு முயற்சி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மஆசாமியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story