7 சதவீத கூலி உயர்வை வழங்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்ய முடிவு, பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


7 சதவீத கூலி உயர்வை வழங்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்ய முடிவு, பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 10 March 2018 3:45 AM IST (Updated: 10 March 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

ஒப்பந்தப்படி 7 சதவீத கூலி உயர்வை வழங்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கும், திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்திற்கும் கடந்த 20-6-2016-ம் ஆண்டு, புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் 4 ஆண்டுகளுக்கு போடப்பட்டது. இதில் 16 சதவீதம் கூலி உயர்வை உள்நாட்டு உற்பத்தியாளர்கள் அமல்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக 1-11-2017 அன்று முதல் அமல்படுத்த வேண்டிய 7 சதவீத கூலி உயர்வு இன்னும் அமல்படுத்தப்படவில்லை.

இது தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் கூலி உயர்வு அமல்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. எனவே இது தொடர்பாக திருப்பூர் லட்சுமிநகர் மெயின்ரோட்டில் உள்ள பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்க துணைத்தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் நந்தகோபால், துணைச்செயலாளர் முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒப்பந்தப்படி 2-ம் கட்டமாக அமல்படுத்த வேண்டிய 7 சதவீத கூலி உயர்வை உடனே வழங்க வேண்டும்.

கூலி உயர்வை உடனே வழங்கக்கோரி உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்புவது, கூலியை வழங்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்குவது, இதன் பின்னரும் 7 சதவீத கூலி உயர்வு வழங்காவிட்டால் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து வேலை நிறுத்தம் செய்வது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பொருளாளர் சுந்தரம் உள்பட சங்க நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். 

Next Story