குழந்தைகள் பிறப்பு சான்றிதழில் தவறு நடப்பதாக அரசு மருத்துவமனையை ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட முயற்சி-போலீசார் சமரசம்


குழந்தைகள் பிறப்பு சான்றிதழில் தவறு நடப்பதாக அரசு மருத்துவமனையை ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட முயற்சி-போலீசார் சமரசம்
x
தினத்தந்தி 10 March 2018 4:30 AM IST (Updated: 10 March 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

தஞ்சாவூர்,

குழந்தைகள் பிறப்பு சான்றிதழில் தவறு நடைபெறுவதை கண்டித்து தஞ்சை அரசு மருத்துவமனையை ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் பிறப்பை பதிவு செய்வதற்காக மருத்துவமனை வளாகத்தில் மாநகராட்சி சார்பில் மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் குழந்தைகள் பிறப்பை பதிவு செய்ய இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த மையத்திற்கு குழந்தைகள் பிறப்பை பதிவு செய்ய சென்றால் ரூ.1000 வரை லஞ்சம் கேட்கின்றனர். அவ்வாறு லஞ்சம் கொடுத்தாலும் வேண்டும் என்றே குழந்தைகள் பிறப்பு சான்றிதழில் ஆண் குழந்தை என்பதற்கு பதிலாக பெண் குழந்தை என்றும், பெற்றோர்கள் பெயர் மாற்றம் செய்தும் தருகின்றனர். இந்த தவறை திருத்தம் செய்ய சென்றால் குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் வரை லஞ்சம் கேட்கின்றனர். பதிவு செய்யும் இடத்தில் செய்த தவறுகளுக்கு குழந்தைகளின் பெற்றோர்கள் மனதை கஷ்டப்படுத்தி லஞ்சம் பணம் பெறுவதாக கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங்கம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வந்தனர்.

அவர்ளை போலீசார் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் பிறப்பு பதிவு செய்யும் மையத்தில் இனிவரும் காலங்களில் இதுபோன்ற முறைகேடு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள் திரும்பி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story