சம்பா பயிரை காப்பாற்ற வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது, சமாதான கூட்டத்தில் அதிகாரி தகவல்


சம்பா பயிரை காப்பாற்ற வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது, சமாதான கூட்டத்தில் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 10 March 2018 3:30 AM IST (Updated: 10 March 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் கிழக்கு பகுதியில் சம்பா பயிரை காப்பாற்ற வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதாக சமாதான கூட்டத்தில் அதிகாரி தெரிவித்தார்.

சிதம்பரம்,

சிதம்பரம் கிழக்கு பகுதியில் விவசாயிகள் சம்பா பயிர் சாகுபடி செய்துள்ளனர். வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்காக கான்சாகிப் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் சம்பா பயிர் கருகும் நிலையில் உள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், பாசனத்துக்காக வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

எனவே வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடக்கோரி இன்று(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மேலச்சாவடி பெரிய மதகு அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்தனர்.

இது தொடர்பாக சமாதான கூட்டத்துக்கு வருமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை தாசில்தார் ஆறுமுகம் சிதம்பரம் தாலுகா அலுவலகத்திற்கு அழைப்பு விடுத்தார். அதன்படி நேற்று காலையில் சமாதான கூட்டம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இதில் கொள்ளிடம் வடிகால் கோட்ட உதவி பொறியாளர் ரமேஷ், லால்பேட்டை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பார்த்திபன், கிள்ளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர் முத்துகுமாரசாமி, சங்க நிர்வாகிகள் ஜீவா, காஜா மொய்தீன், கற்பனை செல்வம், விவசாயிகள் வினோபா, கோவிந்தராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், சிதம்பரம் கிழக்கு பகுதியில் கருகும் நிலையில் உள்ள சம்பா பயிரை காப்பாற்ற வீராணம் ஏரியில் இருந்து கான்சாகிப் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றனர்.

அதற்கு பதில் அளித்து கொள்ளிடம் வடிகால் கோட்ட உதவி பொறியாளர் ரமேஷ் பேசுகையில், தற்போது வீராணம் ஏரியில் இருந்து பரிபூரணநத்தம் வாய்க்கால் வழியாக பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் பாசிமுத்தான் ஓடையை வந்தடைந்துள்ளது. ஓரிரு நாட்களில் பாசிமுத்தான் ஓடை நிரம்பி விடும். பின்னர் அங்கிருந்து கான்சாகிப் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும் என்றார்.

மேலும் தற்போது இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறையினருக்கு ஒத்துழைப்பு நல்கும் பொருட்டு தண்ணீரை வீணாக்காமல் பாசனத்துக்கு வந்தடையும் பொருட்டு விவசாய சங்கம், கான்சாகிப் வாய்க்கால் பாசன சங்கம் மற்றும் விவசாயிகள் அடைப்பு உள்ள இடங்களை சரிசெய்ய வேண்டும் என்பது அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது. 

Next Story