அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் ஆர்ப்பாட்டம்


அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 March 2018 4:45 AM IST (Updated: 10 March 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

நாகை செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நாகை செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 4 வருட பட்டயப்படிப்பில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் மிகவும் பழுதடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. மேலும் இந்த பயிற்சி பள்ளியில் 3 கழிவறைகள் மட்டுமே உள்ளன. குடிநீர், குளியல் அறை மற்றும் தங்குவதற்குரிய அடிப்படை வசதிகள் இல்லை. எனவே இந்த பயிற்சி பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதுடன், மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கடந்த 5-ந்தேதி வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 3 நாட்களில் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கலைந்து சென்றனர்.

இந்தநிலையில் 3 நாட்கள் ஆகியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் நேற்று மருத்துவமனை வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை கோட்ட உதவி கலெக்டர் கார்த்திகேயன், தாசில்தார் ராகவன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சேதமடைந்துள்ள கட்டிடத்தை புதுப்பித்து, அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை மருத்துவமனையில் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கென மாற்று அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய கட்டிடம் புதுப்பிக்கும் பணி முடிந்தவுடன் மீண்டும் விடுதிகள் அங்கே மாற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story