தேவூர் அருகே பள்ளிவேனை ஓட்டி வந்த டிரைவர் மாரடைப்பால் மரணம்


தேவூர் அருகே பள்ளிவேனை ஓட்டி வந்த டிரைவர் மாரடைப்பால் மரணம்
x
தினத்தந்தி 10 March 2018 4:58 AM IST (Updated: 10 March 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

தேவூர் அருகே பள்ளிவேனை ஓட்டி வந்த டிரைவர் மாரடைப்பால் மரணம் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

தேவூர்,

நாமக்கல் மாவட்டம் பல்லக்காபாளையம் முனியப்பன் கோவில் பகுதியில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வேன் டிரைவராக தேவூர் அருகே உள்ள வட்டபரப்பான்காடு பகுதியை சேர்ந்த கந்தசாமி(வயது43) வேலை செய்து வந்தார். இவருக்கு சித்ரா(39) என்ற மனைவியும், திவ்யா(19), மோனிஷா(18), மனோரஞ்சினி (15) என 3 மகள்களும் உள்ளனர்.

நேற்று காலை 9 மணியளவில் இவர் பள்ளி வேனில் ஆலத்தூர் பகுதியில் இருந்து 9 குழந்தைகளை ஏற்றிக் கொண்டு தேவூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார். வழியில் அம்மாபாளையம் பகுதியில் வேனை ஓட்டி வந்த போது டிரைவர் கந்தசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் வேனை அருகே இருந்த வாய்க்காலில் இடித்து பள்ளத்தில் நிறுத்தினார். வேனில் இருந்த குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ஆனால் சிறிதுநேரத்தில் டிரைவர் கந்தசாமி வேனிலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தேவூர் பேரூராட்சி கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதர் தேவூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். வேனில் இருந்த குழந்தைகள் பஸ் மூலம் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story