வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 234 மாணவ - மாணவிகளுக்கு பட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்


வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 234 மாணவ - மாணவிகளுக்கு பட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்
x
தினத்தந்தி 10 March 2018 3:45 AM IST (Updated: 10 March 2018 6:59 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 234 மாணவ - மாணவிகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்கினார்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

வேலூரை அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு தமிழக கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி, 234 மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை நேரில் வழங்கினார். பல்கலைக்கழக துணை வேந்தர் முருகன் வரவேற்றார்.

விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

திருவள்ளுவர் பெயரில் விருது வழங்கும் முறையை தொடங்கி, திருவள்ளுவருக்கு சிறப்பு சேர்த்தவர் எம்.ஜி.ஆர். திருவள்ளுவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கடந்த 2002-ம் ஆண்டு இந்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய பெருமை மறைந்த முதல் - அமைச்சர் ஜெயலலிதாவை சேரும். பல்வேறு சிறப்புகளை பெற்ற வேலூர் பகுதியில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயர் கல்வி பயின்று வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதல் - அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் இந்த பல்கலைக்கழக ஆளுகைக்குட்பட்ட 62 உறுப்பு கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இந்த கல்லூரிகளில் கட்டிடம் கட்டுவதற்கு நிலம், நிதி ஆகியவை வழங்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு இந்த கல்லூரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

திருப்பத்தூரில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மாணவர்களாகிய நீங்கள் பெறுகின்ற பட்டம் உங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. உங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் உங்களை சேர்ந்தவர்கள் பலரும் இதற்காக தியாகம் செய்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் இந்த கல்வி உங்களை நல்ல குடிமக்களாக மாற்றிட உதவிட வேண்டும்.

விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வா.பார்த்திபன் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

விழாவில் மொத்தம் 49 ஆயிரத்து 789 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் 234 பேருக்கு மட்டும் தமிழக ஆளுநர் வழங்கினார். மீதமுள்ள மாணவ, மாணவிகள் 49 ஆயிரத்து 555 பேர் அஞ்சல் வழியாக பட்டம் பெறுகின்றனர்.

இதில் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பெருவழுதி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) செந்தில்குமார், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால், கவர்னரின் முதன்மை செயலாளர் ராஜகோபால், வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், முன்னாள் அமைச்சர் துரைமுருகன், எம்.எல்.ஏ.க்கள், சு.ரவி, லோகநாதன், ஆர்.காந்தி, வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, ராணிப்பேட்டை பெல் செயல் இயக்குனர் கலைச்செல்வன், குடியாத்தம் அபிராமி கல்லூரி நிறுவன தலைவர் எம்.என்.ஜோதி குமார், செயலாளர் சிட்டிபாபு மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆளுகைக்குட்பட்ட கல்லூரிகளின் தாளாளர்கள், நிர்வாகிகள், கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழக அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘பல்கலைக்கழகங்களில் ஊழல் நடைபெற்றுள்ளது போல் மாயையை சிலர் உருவாக்கியுள்ளார்கள். பல்கலைக்கழகத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். உண்மையான அ.தி.மு.க. வினர் யாரும் தினகரன் பின்னால் செல்ல மாட்டார்கள்’ என்றார்.

Next Story