80 கோடி ஆண்டு பழமையான கல்மரம்


80 கோடி ஆண்டு பழமையான கல்மரம்
x
தினத்தந்தி 10 March 2018 12:41 PM IST (Updated: 10 March 2018 12:41 PM IST)
t-max-icont-min-icon

பாறை படிமங்கள் ஒரு நாளில் நிகழக்கூடியது அல்ல.

ழங்காலத்தில் வாழ்ந்த உயிரினங்கள் மற்றும் தாவரங்களை பற்றி அறிந்து கொள்வதற்கு பாறை படிமங்கள் மிகவும் உதவிகரமாக உள்ளது. இதுபோன்று பாறைகளில் படிந்துள்ள உயிரினங்கள் கல்லாக உருமாறும் வடிவங்கள் ‘பாறை படிமங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த பாறை படிமங்கள் உலகில் வாழ்ந்து வந்த உயிரினங்கள் மற்றும் அவற்றின் சூழ்நிலைகளை அறிந்து கொள்ள உதவும் நாட்காட்டியாகவும் பயன்படுகிறது.

பரிணாம வளர்ச்சி குறித்த ஆராய்ச்சியில் புதிய கோட்பாட்டை ஏற்படுத்திய சார்லஸ் டார்வின் வாழ்ந்த காலகட்டத்திற்கு முன்னதாகவே, இந்த பாறை படிமங்கள் குறித்த வரலாறுகள் காணப்பட்டிருக்கின்றன. இதில் கடந்த கி.பி. 1027-வது ஆண்டில் பாரசீக வளைகுடா பகுதிகளில், அதிகமாக பாறை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிரேக்க தத்துவ ஞானியான அரிஸ்டாட்டில், கடற்கரை அருகே உயிரினங்கள் இறந்து படிந்த பாறை படிமங்களை கண்டதாக தனது குறிப்பில் தெரிவித்துள்ளார். அதன்பிறகு இது குறித்த ஆராய்ச்சியானது வளர்ச்சியடைந்தது. அப்போது உயிரியல் விஞ்ஞானியான லியோனார்டோ டாவின்சி, அரிஸ்டாட்டில் கூறிய கருத்துக்கள் உண்மை என நிரூபணம் செய்தார். கடற்கரை ஓரங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து அடித்து வரப்பட்ட சிப்பி மற்றும் உயிரினங்களில் உள்ள ஓடுகள் போன்ற அமைப்பு, பாறைகளில் படிந்துள்ளதை தனது ஆராய்ச்சி குறிப்புகளில் அவர் தெரிவித்துள்ளார்.

பாறை படிமங்கள் ஒரு நாளில் நிகழக்கூடியது அல்ல. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விலங்குகள் அல்லது தாவரங்கள் இறக்கும்போது, அவற்றில் சில பாறைகளில் விழுந்து விடக்கூடும். அவ்வாறு சாதாரணமாக இறக்கக்கூடிய விலங்குகள் பாறைகளில் படிந்தாலும், அவை அதில் நீண்ட நாட்கள் இல்லாமல் போகலாம். ஆனால் உலகில் தோன்றிய இயற்கை அழிவுகள் காரணமாக, மண்ணில் அல்லது கடல் பகுதிகளில் பாறைகளோடு புதைந்து போகும் உயிரினங்கள், நீண்ட நாட்கள் அந்தப் பாறையோடு சேர்ந்து இருப்பதன் காரணமாக, அச்சு அசலாக அவற்றின் உருவம் உள்ளபடியே அதில் படிந்து விடுகிறது.

பெரும்பாலும் உப்பு போன்ற காரத்தன்மை கொண்ட மண்ணில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் வாழ்வதில்லை. அதேபோல கடல் நீரிலும் இறந்த அல்லது அழிந்து போன உயிரினங்களின் பகுதிகள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த சூழ்நிலைகள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த பாறை படிமமானது (பாசில்) உருவாகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த பாறையுடன் உடல் பகுதிகள் ஒன்றிணைந்து கல்லாக உருமாறி, பல கோடி ஆண்டுகள் கூட அதே நிலையில் காட்சியளிக் கிறது. இதுவரை உலகில் 305 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறை படிமங்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தற்போது ஓமன் நாட்டிலும் ஒரு பாறை படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓமன் நாட்டில் உள்ள சர்கியா மாகாணத்தில் இருக்கிறது, கவான் என்ற மலைப்பகுதி. இங்கு ஓமன் புவியியல் சங்கத்தின் சார்பில் உயிரியல் சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தக் குழுவில் இருந்த ஆராய்ச்சியாளர்கள், இந்தப் பகுதியில் பழங் காலத்தில் வாழ்ந்த மக்களின் வசிப்பிடங்கள் குறித்து தொல்பொருள் ஆய்வு செய்து வந்தார்கள்.

அப்போது அந்த ஆய்வுக்குழுவினர் அனைவரும் ஆச்சரியம் அடையும் வகையில் ஒரு பாறைத் துண்டு தென்பட்டது. வித்தியாசமான வடிவத்தில் கிடைத்த கிரானைட் பாறைத் துண்டு அது. புவியியல் ஆராய்ச்சியாளர்கள் அந்தப் பாறைத் துண்டு தென்பட்டப் பகுதியில், உடனடியாகத் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். பிறகு மிகவும் பாதுகாப்பான முறையில், அந்தப் பாறை சேதமில்லாமல் முழு வடிவமாக அங்கு இருந்து வெளியே கொண்டு வரப்பட்டது. அதன் புறத்தோற்றத்தை ஆராய்ந்து பார்த்த போது, அது ஒரு மரத்தின் படிமம் என தெரிய வந்தது.

அது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன மரமாக இருக்கலாம் என்ற நோக்கத்தில், அணுக்கடிகாரம் (பழங்கால பொருட்களின் வயதை கண்டுபிடிக்கும் கருவி) மூலமாக ஆராய்ச்சியாளர்கள் சோதனை மேற்கொண்டனர். கதிர்வீச்சு முறையில் அந்த பாறை படிமத்தில் உள்ள கார்பன் அணுக்களின் ஆயுட் காலத்தை சோதித்தனர். அப்போது அது மரத்தின் படிமம் தான் என்பதும், அதன் வயது 80 கோடி ஆண்டுகள் என்பதும் துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மரத்தின் வெளிப்புற பட்டை மற்றும் உட்புறத்தில் உள்ள ஆண்டு வளையங்கள் ஆகியவை தெளிவாக பார்க்கும் வகையில் உள்ளது.

இது மிதவெப்ப மண்டல காடுகளில் வாழ்ந்த மரம் என்று இதனை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். ஆனால் தற்கால காலநிலையின் அடிப்படையில் ஓமன் நாட்டில் இந்த மரங்கள் இருந்ததற்கான சான்றுகளே இல்லை. எனவே முற்காலத்தில் தற்போது பாலைவனமாக காட்சியளிக்கும் இந்தப் பகுதியில் கடல் இருந்திருக்கலாம் என்றும், அதில் உலகின் வேறு பகுதிகளில் இருந்து இயற்கை அழிவின் காரணமாக அடித்து வரப்பட்ட இந்த மரத்தின் படிமங்கள் படிந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு அந்த கல் மரம், ஓமன் பாரம்பரியம் மற்றும் கலாசார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல் மரமானது, முதல் முறையாக மஸ்கட் நகரில் ஓமன் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் சமீபத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. 80 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மரத்தின் கல் படிமத்தை மக்கள் அனைவரும் பார்வையிட்டுச் சென்றனர். 80 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, இந்த மண்ணில் புதைந்துபோன ஒரு மரம் இன்றும் கல்லாக நின்று, தான் உயிர் வாழ்ந்ததற்கான சாட்சியத்தை அளித்ததைக் கண்டு பார்வையாளர்கள் அனைவரும் வியந்து போனார்கள். கண்காட்சியைக் கண்டுகளித்தவர்களிடம் தன்னுடைய சாட்சியத்தை அளித்த அந்தக் கல் மரம், இப்போது ஓமன் தேசிய அருங்காட்சியகத்தில் இருந்தபடி தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொண்டிருக்கிறது. 

Next Story