கோபி அருகே பரபரப்பு நூதன முறையில் வியாபாரியிடம் நகை பறிப்பு


கோபி அருகே பரபரப்பு நூதன முறையில் வியாபாரியிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 11 March 2018 4:15 AM IST (Updated: 11 March 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

நூதன முறையில் வியாபாரியிடம் நகை பறித்துவிட்டு ஆசிரியரிடம் பணம் அபேஸ் செய்த மர்மநபர்.

கடத்தூர்,

கோபி அருகே நூதன முறையில் வியாபாரியிடம் நகையை பறித்துவிட்டு ஆசிரியரிடம் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோபி பி.பி.எம். நகரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 65). இவர் அரிசி வியாபாரி. காளியப்பன் வெளியூர் சென்றுவிட்டு நேற்று மதியம் மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். பி.பி.எம். நகர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு மர்மநபர், மோட்டார்சைக்கிளை தடுத்து நிறுத்தினார்.

காளியப்பனிடம் அவர், தன்னை ஒரு அரசு அதிகாரி என்று கூறி அறிமுகப்படுத்தி கொண்டார். பின்னர், ‘இந்த பகுதியில் கொள்ளையர்களின் நடமாட்டம் உள்ளது. உங்களிடம் பணம், நகை இருந்தால் என்னிடம் கொடுங்கள். அதை பத்திரமாக மடித்து தருகிறேன். உங்களிடம் இருந்தால் கொள்ளையர்கள் பறித்து சென்றுவிடுவார்கள்.‘ என்றார்.

அதை உண்மை என்று நம்பிய காளியப்பன் தான் கழுத்தில் அணிந்திருந்த 3¼ பவுன் தங்க சங்கிலியையும், கையில் அணிந்திருந்த 1 பவுன் மோதிரத்தையும் கழற்றி அவரிடம் கொடுத்தார். அதை அந்த நபர் ஒரு காகிதத்தில் மடித்து கொடுப்பது போல் மடித்து காளியப்பனிடம் கொடுத்தார். உடனே அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்பின்னர் காளியப்பன் வீட்டுக்கு சென்று அந்த காகிதத்தை திறந்து பார்த்தார். அப்போது அதில் நகை எதுவும் இல்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். நூதன முறையில் பேசி தன்னிடம் இருந்த 4¼ பவுன் நகையை மர்மநபர் அபேஸ் செய்துவிட்டு சென்றது தெரியவந்தது.

இதேபோல் கோபி அருகே மற்றொரு சம்பவம் நடந்தது. அதன் விவரம் வருமாறு:-

கோபி அருகே உள்ள கொளப்பலூரை சேர்ந்தவர் குருசாமி (83). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று மாலை கொளப்பலூரில் இருந்து மோட்டார்சைக்கிளில் கோபிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மர்மநபர் குருசாமியிடம் தான் அரசு அதிகாரி என்று கூறி அறிமுகப்படுத்தி கொண்டார். பின்னர் அவரிடம் இந்த பகுதியில் கொள்ளையர்கள் சுற்றித்திரிகிறார்கள் என்று நூதனமாக பேசி அவர் வைத்திருந்த ரூ.45 ஆயிரத்தை வாங்கினார். அந்த பணத்தை ஒரு காகிதத்தில் மடித்து கொடுப்பது போல் அவரிடம் கொடுத்தவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். குருசாமி சிறிது தூரம் சென்றதும் அந்த காகிதத்தை திறந்து பார்த்தார். அப்போது அதில் பணம் இல்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

இந்த 2 சம்பவங்கள் குறித்தும் காளியப்பனும், குருசாமியும் கோபி போலீசில் புகார் அளித்தார்கள். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story