ஜாமீனில் வெளியே வந்த துணைவேந்தர் கணபதி லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆஜராகி கையெழுத்திட்டார்


ஜாமீனில் வெளியே வந்த துணைவேந்தர் கணபதி லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆஜராகி கையெழுத்திட்டார்
x
தினத்தந்தி 11 March 2018 4:00 AM IST (Updated: 11 March 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

ஜாமீனில் வெளியே வந்த துணைவேந்தர் கணபதி நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

துடியலூர்,

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த கணபதி, பேராசிரியர் ஒருவரை பணி நிரந்தரம் செய்ய ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய கோரி கணபதி, தர்மராஜ் ஆகியோர் கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இருமுறை மனு தாக்கல் செய்து இருந்தனர். இருவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து கணபதி சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையின் போது கணபதிக்கு நிபந்தனை அடிப்படையில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா ஜாமீன் வழங்கினார். இந்த உத்தரவு கோவை மத்திய சிறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு கணபதி விடுவிக்கப்பட்டார். கணபதிக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியர் தர்மராஜும் கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதி மன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி நீதிபதி ஜான் மினோ உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தர்மராஜும் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இருவரும் தினமும் காலை, மாலை விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கணபதி மற்றும் தர்மராஜ் ஆகியோர் நேற்று காலை 10.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் கவுண்டம்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆஜராகி கையெழுத்திட்டனர்.

Next Story