காரமடை அருகே கோடதாசனூரில் ரே‌ஷன் கடை அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


காரமடை அருகே கோடதாசனூரில் ரே‌ஷன் கடை அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 March 2018 3:15 AM IST (Updated: 11 March 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

காரமடை அருகே கோடதாசனூரில் ரே‌ஷன் கடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரமடை,

கோவை மாவட்டம் காரமடை பேரூராட்சிக்கு உட்பட்ட கோடதாசனூரில் 200–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ள மக்கள் குடும்ப அட்டை மூலம் தங்களுக்கு மானிய விலையில் அரசு வழங்கும் அரிசி, சர்க்கரை, மண் எண்ணெய் போன்றவற்றை பெற, 3 கிலோ மீட்டர் தூரம் கடந்து மங்கலகரை புதூரில் உள்ள ரே‌ஷன் கடைக்கு செல்ல வேண்டி உள்ளது.

இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் கோடதாசனூரின் அருகிலுள்ள எத்தப்பன் நகர் மக்கள் 4 கிலோ மீட்டர் தூரம் கடந்து டி.ஜி. புதூர் ரே‌ஷன் கடைக்கும், டி.ஆர்.எஸ். நகரில் வசிக்கும் மக்கள் 4 கிலோ மீட்டர் தூரம் கடந்து காரமடை ரே‌ஷன் கடைக்கும் சென்று, ரே‌ஷன் பொருட்களை வாங்கி வர வேண்டி உள்ளது.

இதனால் மேற்கண்ட பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு மாதந்தோறும் ரே‌ஷன் பொருட்கள் வழங்கும் நாளில் வேலைக்கு செல்ல முடியாமல், ரே‌ஷன் கடைக்கு சென்று வரவே நேரம் சரியாக உள்ளது. குறிப்பாக மண் எண்ணெய் வழங்கும் நாளில், நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கோடதாசனூர், எத்தப்பன் நகர், டி.ஆர்.எஸ். நகர் ஆகியவற்றுக்கு மைய பகுதியான கோடதாசனூரில் ரே‌ஷன் கடை அமைக்க வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் விரைவில் கோடதாசனூரில் ரே‌ஷன் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story