தனது படத்துடன் புதுப்பெண்ணின் புகைப்படத்தை இணைத்து முகநூலில் வெளியிட்டார் ஊர்காவல்படை வீரர் கைது


தனது படத்துடன் புதுப்பெண்ணின் புகைப்படத்தை இணைத்து முகநூலில் வெளியிட்டார் ஊர்காவல்படை வீரர் கைது
x
தினத்தந்தி 11 March 2018 3:45 AM IST (Updated: 11 March 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

தனக்கு திருமணம் செய்து கொடுக்காமல், வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுத்ததால், புதுப்பெண்ணின் புகைப்படத்தை தனது புகைப்படத்துடன் இணைத்து முகநூலில் வெளியிட்டு, ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய ஊர்காவல் படை வீரரை போலீசார் கைது செய்தனர்.

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில், என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள சின்னணைந்தான் விளையை சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (வயது30), ஊர்காவல்படை வீரர். இவருக்கு, பறக்கையை சேர்ந்த 23 வயதுடைய பட்டதாரி இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த இளம்பெண்ணை சுயம்பு லிங்கம் திருமணம் செய்ய ஆசைப்பட்டார். இதற்காக அவர் இளம்பெண்ணின் வீட்டுக்கு நேரடியாக சென்று பெண் கேட்டார். ஆனால், பெற்றோர் பெண் கொடுக்க மறுத்துவிட்டனர்.

இதற்கிடையே அந்த இளம்பெண்ணுக்கும் மார்த்தாண்டம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்தது.

இந்தநிலையில், அந்த பெண்- கணவருடன், பறக்கையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு விருந்துக்கு வந்தார். அப்போது அங்கு வந்த சுயம்புலிங்கம், புதுப்பெண்ணை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகள் கூறி தகராறு செய்தார்.

இதுகுறித்து அந்தபெண் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது புகைப்படங்களை, சுயம்புலிங்கம் தனது புகைப் படத்துடன் இணைத்து முகநூலில் வெளியிட்டுள்ளார். மேலும் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சுயம்புலிங்கத்தை கைது செய்தனர். 

Next Story