மண்டைக்காடு கோவில் திருவிழா கோலாகலம்: பகவதி அம்மனை தரிசிக்க குவியும் பக்தர்கள்


மண்டைக்காடு கோவில் திருவிழா கோலாகலம்: பகவதி அம்மனை தரிசிக்க குவியும் பக்தர்கள்
x
தினத்தந்தி 11 March 2018 4:15 AM IST (Updated: 11 March 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

மண்டைக்காடு கோவில் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இதையொட்டி பகவதி அம்மனை தரிசிக்க கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பெரிய சக்கர தீவட்டி பவனி நாளை நடக்கிறது.

மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலை “பெண்களின் சபரிமலை” என்றும் அழைப்பார்கள். இங்கு மாசி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதையொட்டி குமரி மாவட்டம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் பக்தர்கள் பகவதி அம்மனை தரிசிக்க குவிந்தபடி உள்ளனர். கேரளாவை சேர்ந்த பெண்கள் பலரும் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.

நாளை (திங்கட்கிழமை) 9-வது நாள் திருவிழாவை முன்னிட்டு பெரிய சக்கர தீவட்டி பவனி நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு தீபாராதனையும், 7.30 மணிக்கு பைங்குளம் அனந்தமங்கலம் ஸ்ரீகண்டன் சாஸ்தா ஆலயத்தில் இருந்து சந்தன குடம் மற்றும் காவடி ஊர்வலம் புறப்படுகிறது. 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருவதும், 9.30 மணிக்கு இரணியலில் இருந்து யானை மீது களப பவனியும் நடைபெறுகிறது. 11 மணிக்கு சமய மாநாடு நடக்கிறது. இதற்கு டாக்டர் தாணுலிங்கம் தலைமை தாங்குகிறார்.

மதியம் 1 மணிக்கு உச்சி கால பூஜையும், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7 மணிக்கு சமய மாநாடு மற்றும் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 9 மணிக்கு அத்தாழ பூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருவதும், அதைத்தொடர்ந்து பெரிய சக்கர தீவட்டி பவனியும் நடக்கிறது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு நேற்று மதியம் போலீஸ் டி.ஐ.ஜி. கபில் குமார் சரத்கார் வந்தார். அவர் கோவிலில் அம்மனை தரிசனம் செய்தார். பின்னர் கடற்கரை பகுதிக்கு சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். மேலும் தேவசம் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும் போது, “மண்டைக்காடு கோவில் திருவிழா பாதுகாப்பு பணிக்கு 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை பொறுத்து, கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்“ என்றார்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், குளச்சல் உதவி சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, இன்ஸ்பெக்டர் முத்துராஜ், பத்மநாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மண்டைக்காடு கோவில் மேலாளர் ஆறுமுகதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story