எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் கடலூருக்கு வந்தன


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் கடலூருக்கு வந்தன
x
தினத்தந்தி 11 March 2018 4:00 AM IST (Updated: 11 March 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் 37 ஆயிரத்து 380 மாணவ-மாணவிகள் எழுதஉள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் கடலூருக்கு நேற்று வந்தன.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பிளஸ்-2, பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இத்தேர்வை 61 ஆயிரத்து 767 மாணவ-மாணவிகள் எழுதி வருகிறார்கள். இதற்கிடையே வருகிற 16-ந்தேதி(வெள்ளிக்கிழமை) எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும் தொடங்குகிறது. இந்த தேர்வை 37 ஆயிரத்து 380 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இதனால் நடப்பு கல்வி ஆண்டில் அரசு பொதுத்தேர்வை எழுதும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை மட்டும் 99 ஆயிரத்து 147 ஆகும்.

இதில் வருகிற 16-ந்தேதி தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 503 மாணவ-மாணவிகளும், கடலூர் கல்வி மாவட்டத்தில் 24 ஆயிரத்து 877 மாணவ-மாணவிகளும் எழுதுகிறார்கள். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 49 தேர்வு மையங்களும், கடலூர் கல்வி மாவட்டத்தில் 79 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து கடலூருக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. இந்த வினாத்தாள்களை தேர்வு வாரியத்தில் இருந்தே தேர்வுமையம் வாரியாக தேர்வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாடவாரியாக கட்டுகட்டாக கட்டி அனுப்பி இருந்தனர். அவற்றை கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி கலையரங்கில் இறக்கி வைத்தனர். பின்னர் அங்கிருந்து கடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 7 வினாத்தாள் மையங்களுக்கும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள 5 வினாத்தாள் மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். பின்னர் அதனை அந்தந்த வினாத்தாள் மையங்களில் இறக்கி வைத்தனர். வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள 12 மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த பணிகளை முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட கல்வி அதிகாரிகள் இளங்கோ (விருத்தாசலம்), சுப்பிரமணியம்(கடலூர்), முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் தேவநாதன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Next Story