காங்கிரஸ் பிரமுகர் கொலையில் கைது செய்யப்பட்ட 4 பேர் சிறையில் அடைப்பு


காங்கிரஸ் பிரமுகர் கொலையில் கைது செய்யப்பட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 11 March 2018 4:45 AM IST (Updated: 11 March 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் பிரமுகர் கொலையில் கைது செய்யப்பட்ட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மாறன்(வயது 55). காங்கிரஸ் பிரமுகர். புதுவை அரசு மருத்துவமனை அருகே சொந்தமாக ஆம்புலன்ஸ் வாகனங்களை வைத்து தொழில் செய்து வந்தார். இவரை கடந்த 6-ந் தேதி இரவு ஒரு கும்பல் சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்தது. இது குறித்து பெரியகடை போலீசார் விசாரணை நடத்தி வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த மூர்த்தி, அவருடைய மனைவி திலகா உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இதற்கிடையே மாறன் கொலை வழக்கு தொடர்பாக புதுவை போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்களில் செட்டிப்பாளையம் ராஜசேகரன் (27), நெல்லிதோப்பு மணிகண்டன் (30), வில்லியனூர் காண்டீபன் (39), நொச்சிக்குப்பம் ஞானசேகரன் (25) ஆகிய 4 பேர் திண்டிவனம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். குருசுக் குப்பம் பிரபாகரன் (20), மரவாடி பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (19) ஆகியோர் புதுவை கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய பலர் தமிழக பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதில் வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த சுகு என்ற சுகுமாறன் (35), சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற விக்கி (29), உதயா என்ற ராதாகிருஷ்ணன் (24), சீர்காழி பகுதியை சேர்ந்த அஜித் (22) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்திகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட மாறனுக்கும், மூர்த்திக்கும் இடையே மீனவ கிராம பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. மூர்த்தி மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. சமீபத்தில் நடந்த மாசிமக தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தரப்பில் ஊர் பிரமுகர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டது. இதில் பொருளாளர் மாறன் பணத்தை வசூல் செய்தார். மூர்த்தி தரப்பினர் தனியாக வசூல் வேட்டை நடத்தினர். இது தொடர்பாக புகார் வரவே மூர்த்தி குடும்பத்திற்கு எதிராக பஞ்சாயத்து தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் மூர்த்தியின் மனைவி திலகாவிற்கு ஊரில் மீன் சப்ளை செய்வது நிறுத்தப்பட்டது. அவர் வியாபாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதற்கு மாறனும், அவரது தம்பி நாராயணனும் தான் முக்கிய காரணம் என மூர்த்தியும், அவரது மனைவியும் கருதினர். எனவே தான் அவர்கள் திட்டம் தீட்டி மாறனை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான மூர்த்தி, அவருடைய மனைவி திலகா உள்பட பலரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே இந்த வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்து புதுவை மற்றும் கடலூர் சிறையில் உள்ள 6 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

Next Story