நாடாளுமன்ற மேல்-சபை எம்.பி. பதவிக்கு பா.ஜனதா சார்பில் நாராயண் ரானே போட்டி


நாடாளுமன்ற மேல்-சபை எம்.பி. பதவிக்கு பா.ஜனதா சார்பில் நாராயண் ரானே போட்டி
x
தினத்தந்தி 11 March 2018 3:43 AM IST (Updated: 11 March 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற மேல்-சபை எம்.பி. பதவிக்கான தேர்தலில் பா.ஜனதா சார்பில் நாராயண் ரானே நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

மும்பை,

கொங்கன் மண்டலத்தில் பலம் வாய்ந்த தலைவராக திகழ்பவர் நாராயண் ரானே. சிவசேனா சார்பில் முதல்-மந்திரி பதவி வகித்த இவர் 2005-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகினார்.

பின்னர் காங்கிரஸ் கட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்த அவர் கடந்த ஆண்டு அக்கட்சியில் இருந்தும் விலகினார். பா.ஜனதாவில் இணையப்போவதாக தகவல் வெளியான நிலையில் அவர் புதிதாக மராட்டிய சுவாபிமான் என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, தன்னை நாடாளுமன்ற மேல்-சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுமாறு கூறியதாக நாராயண் ரானே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நாராயண் ரானே நாடாளுமன்ற மேல்-சபை பதவிக்கு பா.ஜனதா சார்பில் நாளை (திங்கட்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக தெரியவந்துள்ளது.

மராட்டியத்தில் இருந்து நாடாளுமன்ற மேல்-சபைக்கு 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதில் 122 சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் கொண்ட பா.ஜனதா சார்பில் 3 பேர் வெற்றி பெற முடியும். ஏற்கனவே பா.ஜனதா சார்பில் மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார்.

பா.ஜனதா சார்பில் போட்டியிடும் 3-வது வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story