எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: 1,990 அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: 1,990 அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு
x
தினத்தந்தி 11 March 2018 5:07 AM IST (Updated: 11 March 2018 5:07 AM IST)
t-max-icont-min-icon

கண்காணிப்பு பணியில் ஈடுபடும் 1,990 அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

நாமக்கல்,

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் 1,990 அறை கண்காணிப்பாளர்கள் நேற்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 311 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 882 மாணவர்கள், 10 ஆயிரத்து 708 மாணவிகள் என 22 ஆயிரத்து 590 பேர் எழுத விண்ணப்பித்து உள்ளனர்.

இதற்காக மாவட்டம் முழுவதும் 88 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதேபோல் 501 தனித்தேர்வர்களும் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்காக 3 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. வினாத்தாள்கள் 10 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு பணியில் 88 முதன்மை கண்காணிப்பாளர்கள், 88 துறை அலுவலர்கள், 252 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. 1,990 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடந்தது. முதன்மை கல்வி அதிகாரி உஷா, மாவட்ட கல்வி அதிகாரி அருளரங்கன் ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினர். 1,990 அறை கண்காணிப்பாளர்களும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, பணிநியமனம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகேசன் மற்றும் பள்ளி கல்வித்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story