குமாரபாளையத்தில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி தொடங்கப்படும் அமைச்சர் தங்கமணி பேச்சு
குமாரபாளையத்தில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி தொடங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி பேசினார்.
குமாரபாளையம்,
குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியின் ஆண்டு விழா, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் தலைமை தாங்கினார்.பேராசிரியர் சுப்பிரமணியன் ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு மடிக்கணினி மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவில் தமிழகம் உயர்கல்வித் துறையில் முதல்நிலைக்கு உயர்த்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா முடிவெடுத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். அதற்காக மாவட்டத்திற்கு ஒரு அரசு கல்லூரி ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் குமாரபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டது. 24 சதவீதத்தினரே உயர்கல்வி பெற்று வந்த நிலையில் ஜெயலலிதாவின் நடவடிக்கையின் மூலம் 45 சதவீதம் பேர் உயர்கல்வி பெற்றனர்.
குமாரபாளையம் தொகுதியில் தாலுகா அலுவலகம், ஒரு கலைக்கல்லூரி, சாலை போக்குவரத்து அலுவலகம் ஆகியவை தொடங்கப்பட்டு உள்ளது. விரைவில் குமாரபாளையத்தில் ஒரு அரசு என்ஜினீயரிங் கல்லூரி தொடங்கப்படும். குமாரபாளையத்தில் தாலுகா அலுவலக கட்டிடம், கூடுதலாக போக்குவரத்து போலீஸ் நிலையம், வெப்படையில் போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையம் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. இக்கல்லூரிக்குத் தேவையான 30 வகுப்பறை கட்டிடம், ஓய்வறை வசதி உள்பட அனைத்து வசதிகளும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தாசில்தார் ரகுநாதன், பால்வள கூட்டுறவு சங்கத்தலைவர் சின்னச்சாமி, டி.கே.சுப்பிரமணியம், குமாரபாளையம் அர்பன் வங்கி தலைவர் நாகராஜன், முன்னாள் நகர்மன்றதுணைத்தலைவர் பாலசுப்பிரமணி, முன்னாள் முதல்வர் தங்கவேல், கவுன்சிலர்கள் பாஸ்கரன், ரவி, அர்ச்சுனன், எஸ்.என்.பழனிசாமி, கோபாலகிருஷ்ணன், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முனைவர் ரகுபதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story