காணாமல் போன நிலா - சுபா


காணாமல் போன நிலா - சுபா
x
தினத்தந்தி 11 March 2018 2:55 PM IST (Updated: 11 March 2018 2:55 PM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அருணுக்கும், பூர்ணிமாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

முன்கதை சுருக்கம்:

னியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அருணுக்கும், பூர்ணிமாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணம் முடிந்து திரும்பி வரும்போது பூர்ணிமாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக வாடகைக்கு தேர்ந்தெடுத்த வீட்டை அலங்கரிக்கும் பொறுப்பை தனது நண்பன் ரகுவிடம் அருண் ஒப்படைக்கிறான். அவனோ தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த வீட்டில் குடித்து கும்மாளம் அடிக்க, அருண் வீட்டை காலி செய்துவிட்டு வேறுவீட்டில் குடியேறும் நிலை ஏற்படுகிறது. அங்கு ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்கும் அருண், மனைவியை அழைத்துக்கொண்டு நெருங்கிய நண்பன் வீட்டுக்கு செல்கிறான். அருண் நண்பனின் வீட்டை பார்வையிடும் பூர்ணிமா நாமும் கண்டிப்பாக சொந்த வீடு வாங்கியே தீர வேண்டும் என்கிறாள். அவர்களது கனவை நனவாக்கும் விதமாக தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தாங்கள் நடத்தும் போட்டியில் வெற்றி பெறும் தம்பதிகளுக்கு வீட்டு மனை வழங்குவதாக அறிவிக்கிறது. அதில் இருவரும் கலந்து கொள்கிறார்கள். அதில் வெற்றி பெறுவதற்காக நீச்சல் பயிற்சிக்கு செல்லும் அருண், அங்கு போட்டியில் பங்கேற்ற சக பெண் போட்டியாளர் ஒருவரை சந்திக்கிறான்.

அன்றிரவு, பூர்ணிமாவுடன் சிற்றுண்டி அருந்த அமர்ந்தபோது, “இன்னிக்கு நீச்சல் குளத்துல யாரைப் பார்த்தேன் சொல்லு..!” என்றான் அருண்.

“யாரை..?”

‘முத்ரா..’ என்று சொல்ல ஆரம்பித்தவன், அவள் நிமிர்ந்து பார்த்ததும், சட்டென்று அதை மாற்றி, “முத்துராமன்” என்றான்.

“அது யாரு..?” பூர்ணிமா அசுவாரசியமாக தோசையைப் பிய்த்துக்கொண்டே கேட்டாள்.

“இன்னொரு காலேஜ் ப்ரெண்ட். தொந்தியும், தொப்பையுமா மோசமா இருக்கான்..!” என்று சொல்லி அருண் பேச்சை மாற்றி, சிரித்தான்.

ஏன் உண்மையைச் சொல்லாமல் சட்டென்று நாக்கு புரண்டுவிட்டது என்று அவன் அடிமனதில் யோசனை ஓடியது. என்ன இருந்தாலும், பூர்ணிமா இளம் மனைவி. இன்னொரு இளம்பெண்ணை நீச்சல் குளத்தில், அதுவும் நீச்சல் உடையில் சந்தித்ததாகச் சொன்னால், அநாவசியமாக அவள் மனதில் சந்தேகம் விதைக்கப்படும் என்று அவனுடைய ஆண்மனம் எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். இயல்பாக நீச்சல் கற்றுக்கொள்ளப் போவதைக்கூட அவள் வேறு கண்ணோட்டத்தில் கற்பனை செய்து குழப்பிக்கொள்ளக் கூடாதே என்று அவன் பேச்சை மாற்றிவிட்டான்.

* * *

ஆனால், மறுநாளிலிருந்து அருண் நீச்சல் பயிற்சிக்குப் போகும்போதெல்லாம் முத்ரா எங்காவது கண்ணில் தென்படுகிறாளா என்று தாமாகக் கண்கள் தேடின.

ஆனால், ஒருமுறை கூட அவள் பார்வையில் இடறவேயில்லை. ஏன் அநாவசியமாக அவளையே நினைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று அருண் அவளை கவனத்திலிருந்து விலக்கினான்.

காலையில் மட்டுமல்லாமல் மாலையிலும் ஒரு மணி நேரம் பயிற்சிக்குப் போனதில், இரண்டு வாரங்களில் நீச்சல் ஓரளவு கைவரப் பெற்றுவிட்டான். ஆரம்பத்தில் உடலில் அத்தனை தசைகளும் வலித்தன. ஆனால், போகப்போக நீச்சல் அவனுக்குப் புத்துணர்ச்சியும், உற்சாகமும் கொடுக்கலாயிற்று.

அவன் அலுவலகத்தில் இருந்த ஒரு பொழுதில், பூர்ணிமா தொலைபேசியில் அழைத்தாள். அவள் குரலில் பரபரப்பு.

“உன் ஈ-மெயிலை செக் பண்ணு அருண். அடுத்த கட்டப் போட்டி பத்தி தகவல் வந்திருக்கு..”

தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது.

குறிப்பிட்ட ஞாயிறன்று பழையபடி நீலாங்கரை கடற்கரையை ஒட்டியிருந்த ஓட்டல் நீலிமாவில் சந்திப்புக்கு ஏற்பாடு ஆகியிருந்தது.

முதல் கட்டத்தில் தேர்வான நான்கு ஜோடிகள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்.

* * *

ஓட்டல் நீலிமா.

நடுவராக இருந்த ஷீலா மைக்கைப் பிடித்தாள்.

“உங்களுக்கு மாலை வாழ்த்துகள். இப்போ ஒரு குறும்படம் திரையிடப்படும். அதை கவனமாப் பாருங்க..”

விளக்குகள் அணைக்கப்பட்டன. திரை உயிர்பெற்றது.

பல இரும்பு சாமான்கள் கீழே சிதறிக் கிடக்கும் ஒரு தரை காண்பிக்கப்பட்டது. சிவப்பு பனியனும், சிவப்பு தொப்பியும் அணிந்த ஒரு நபர் உள்ளே பிரவேசித்தார். குந்தி அமர்ந்து கீழே கிடக்கும் அந்த உதிரிப் பொருட்களை ஒன்றோடு ஒன்று இணைக்க ஆரம்பித்தார். பத்து நிமிடங்களில் அது ஒரு சைக்கிளாக முழுமை பெற்றது. அந்த சைக்கிளில் ஏறி, அவர் சிறு வட்டமடித்ததுடன் அந்த ஒளிபரப்பு நிறைவுக்கு வந்தது.

மீண்டும் அரங்க விளக்குகள் ஒளிர்ந்தன. ஷீலா மைக்கைப் பிடித்தாள்.

“அடுத்த போட்டி போன போட்டியைவிட கொஞ்சம் கடினமா இருக்கணும்னு டிஸைன் பண்ணியிருக்கோம். இதே போல நாலு ஜோடிக்கும் நாலு செட் உதிரி பாகங்கள் கொடுப்போம். எவ்வளவு வேகமாக ஒண்ணோட ஒண்ணு பொருத்தி, அதை முழு சைக்கிளாக மாத்தறீங்கன்றது உங்க சாமர்த்தியம். இதுதான் அடுத்த போட்டி. உங்க பயிற்சிக்காக நாலு செட் இப்பவே கொண்டுவந்திருக்கோம். இன்னொரு தடவை செய்முறையை நல்லா கவனமா பார்த்துக்குங்க. ரெண்டு மணி நேரம் பயிற்சி எடுத்துக்கிட்டுப் போங்க.. உங்க முயற்சி வெற்றிபெற எங்களோட வாழ்த்துகள்..”

பூர்ணிமாவின் முகத்தில் கவலை.

“என்ன அருண், பார்த்தாலே பக்குனு இருக்கு..! இது வேலைக்கு ஆகுமா..?”

அருணுடைய முகம் மலர்ந்தது. “நீ கவலைப்படாத.. இந்தப் போட்டியில நாமதான் ஜெயிக்கறோம்.”

“எப்படி இவ்ளோ தைரியமா சொல்ற..?”

“உனக்குத் தெரியாது.. சின்ன வயசுலயே எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு சைக்கிள் கடை இருந்துச்சு. பொழுது போகணும்னு அங்க போய் உக்காந்துருவேன். காக்கி அரை டிராயர் போட்டுக்கிட்டு கடை ஓனர் வேலை செய்வாரு.. அந்த அண்ணனுக்கு அதை இதை எடுத்துக் குடுத்து நான் நிறைய ஹெல்ப் பண்ணியிருக்கேன்.. சைக்கிளை அக்கு வேறு, ஆணி வேறா பிரிச்சுப் போட்டு அவர் சேர்க்கறதை கூட இருந்து கவனிச்சிருக்கேன்.. அது எனக்குப் பழக்கமான வேலைதான்.. என்ன, கிட்டத்தட்ட பதினஞ்சு வருஷம் ஆயிருச்சு.. ஆனாலும் எதுவும் மறக்கல..”

மீண்டும் அந்த ஒளிபரப்பு திரையிடப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி தொடங்கியது. அருண் சொன்னபடியே வேகமாக செயல்பட்டான். முன்சக்கரமும், பின்சக்கரமும் வெவ்வேறு அளவில் இருந்ததை மட்டும் கவனிக்காமல் விட்டதால், முதலில் சற்று தடுமாற்றம் இருந்தது. பிறகு அதிலும் கவனம் செலுத்திப் புரிந்துகொண்டான். சவாலாக இருந்தது ஹேண்டில்பாரைப் பொருத்துவதுதான்.

“இது நேரா இல்லேன்னா, சைக்கிள் நேராப் போகாது..” என்று சொல்லிக்கொண்டே அதையும் சரிப்படுத்தினான்.

மற்றவர்களைவிட அவன் முந்திக்கொண்டு சைக்கிளைப் பொருத்தி முடித்தது பூர்ணிமாவுக்கு பெரும் நம்பிக்கை அளித்தது.

“அடுத்த வாரம், ஞாயிறு அன்னைக்கு உங்களையெல்லாம் நாங்க போட்டி நடக்கற இடத்துக்கு கூட்டிப் போவோம். வந்து சேர்ந்துருங்க..” என்றாள் ஷீலா.

* * *

நள்ளிரவில் யாரோ கன்னத்தில் உரசுவதும், பட்டென்று இடிப்பதும்போல் உணர்ந்து, பூர்ணிமா சட்டென்று விழித்து சிறுவிளக்கைப் போட்டுப் பார்த்தாள்.

உறக்கத்தில் இருந்த அருண் இரண்டு கைகளையும் இடதும், வலதுமாக ஏதோ திருகுவதும், திருப்புவதும், பொருத்துவதுமாக இருந்ததைக் கண்டாள்.

கனவில்கூட அவன் சைக்கிளின் உதிரி பாகங்களை ஒன்றுடன் ஒன்று பொருத்திப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று புரிந்ததும், அவளுடைய முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது.

* * *

போட்டிக்கான நாள் வந்தது.

குறிப்பிட்ட மைதானத்துக்கு அவர்கள் கூட்டிச் செல்லப்பட்டார்கள். நான்கு ஜோடிகளும் ஒருவருக்கொருவர் கைகொடுத்து, வாழ்த்திக்கொண்டார்கள்.

பார்வையாளர்களாக பலர் வந்து, கூடியிருந்தார்கள்.

அருண், பூர்ணிமா இருவரும் கைகோர்த்து நடக்கும்போது, “ஹாய் அருண்..!” என்று குரல் கேட்டு அருண் திரும்பிப் பார்த்தான்.

புன்னகையுடன் முத்ரா! உடுத்தியிருந்த மெலிதான ஆரஞ்சு நிற புடைவை உடலோடு ஒட்டியிருந்தது.

“ஹாய்..!” என்றான் அருண், உலர்ந்த குரலில்.

“இதான் என் பார்ட்னர். சொன்னேனே, கார்த்திக்..” என்று முத்ரா அருகிலிருந்த இளைஞனைக் காட்டினாள்.

கார்த்திக் நட்புடன் புன்னகைத்தான். அடர்த்தியான முடி. அகலமான நெற்றி. சிறு கண்கள். கூரான நாசி. சற்றே கீழ்ப்புறம் வளைந்திருந்த உதடுகள். திடமான உடலமைப்பு.

குழப்பத்துடன் பார்த்த பூர்ணிமாவிடம், முத்ரா, “இந்த தடவையும் நீங்கதான் ஜெயிக்கப்போறீங்க.. அருண் எவ்வளவு சின்சியரா நீச்சல் கத்துக்கிட்டாருனு நான் பார்த்தேனே..!” என்றாள்.

பூர்ணிமா அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“அருண், அதுக்கப்புறம் உங்களை நீச்சல் பயிற்சியில பார்க்க வாய்ப்பு கிடைக்கலை.. ஏன்னா, நான் வந்த நேரம் வேற. நீங்க பயிற்சிக்கு வந்த நேரம் வேற..” என்று சொல்லிவிட்டு முத்ரா கார்த்திக்குடன் பார்வையாளர் பகுதிக்குப் போனாள்.

“ஏய், இவளை ஸ்விம்மிங் பூல்ல எப்ப பார்த்தே..? சொல்லவேயில்லையே..? முத்துராமன்னு யாரையோ பார்த்ததாதான சொன்னே..?” என்றாள் பூர்ணிமா, குரலைக் குறைத்துக்கொண்டு.

“அது வேற நாளு.. இவளைப் பாத்தது வேற நாளு.. அவ பேர் கூட எனக்கு ஞாபகம் இல்ல.. இப்ப முதல்ல இந்தப் போட்டியில கவனத்தை செலுத்துவோமா..?” என்றான் அருண், அந்தப் பேச்சைத் தொடர விரும்பாமல்.

அவன் குரலில் எதற்காக இந்த எரிச்சல் என்று புரியாமல், பூர்ணிமா அவனை ஒருமுறை ஆழமாகப் பார்த்துவிட்டு, தன்னை இயல்பாக்கிக்கொண்டாள்.

ஷீலா போட்டியின் விதிமுறைகளைச் சொன்னாள்.

-தொடரும்

Next Story